கடலுாரில் மாநில அறிவியல் கண்காட்சி 456 படைப்புகளுடன் 114 பள்ளிகள் பங்கேற்பு
கடலுாரில் மாநில அறிவியல் கண்காட்சி 456 படைப்புகளுடன் 114 பள்ளிகள் பங்கேற்பு
ADDED : ஜன 07, 2024 04:50 AM

கடலுார்: கடலுாரில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், 114 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் 456 படைப்புகள் காட்சி படுத்தப்பட்டன.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடலுார் திருப்பாதிரிபுலியூர் செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. நாளை (8 ம் தேதி) வரை 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில், 38 மாவட்டங்களை சேர்ந்த 114 பள்ளி மாணவ மாணவிகளின் 456 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
நேற்று நடந்த கண்காட்சி துவக்க விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வரவேற்றார்.
பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், அன்பில் மகேஷ் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்து, அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர். மாணவர்கள் தங்கள் படைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். .
விழாவில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், 'கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரச அதிக முக்கியத்துவம் அளித்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சீனாவில் ஆண்டுக்கு 12 ஆயிரத்திற்கும் மேலான அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுகின்றனர்.
இந்தியாவில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு குறுகிய கால காப்புரிமை பெறப்படுகிறது. எனவே, இதுகுறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பை வீடியோ பதிவு செய்து அதன் விளக்கத்தை ஆசிரியர்கள் பெற வேண்டும்' என, தெரிவித்தார்.
விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச் செல்வன், மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன், கல்வித் துறை அதிகாரிகள் ஆர்த்தி, இளம்பகவத், லதா, சேதுராமவர்மா, உறுப்பினர் செயலர் சுதன் மற்றும் பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறினார்.