ஆய்வுக்கு செல்லும்போது தங்க விரைவில் கட்டடம்: வேலு
ஆய்வுக்கு செல்லும்போது தங்க விரைவில் கட்டடம்: வேலு
ADDED : ஏப் 18, 2025 12:56 AM
சென்னை:''ஆய்வு மாளிகை கட்ட வேண்டும் என்ற எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை மீது, ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - அமுல் கந்தசாமி: வால்பாறை தொகுதி, ஆனைமலைப் பகுதியில், ஆய்வு மாளிகை கட்ட வேண்டும்.
அமைச்சர் வேலு: அங்கு மூன்று அறைகள் கொண்ட ஆய்வு மாளிகை நல்ல நிலையில் உள்ளது.
அ.தி.மு.க., - உடுமலை ராதாகிருஷ்ணன்: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் விழா நடக்கும். எனவே, 10 அறைகள் கொண்ட ஆய்வு மாளிகை கட்டப்பட வேண்டும்.
அமைச்சர் வேலு: ஆனைமலை செல்லும் வழியில் பொள்ளாச்சி உள்ளது. அங்கு 2 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் ஆய்வு மாளிகை கட்டப்பட உள்ளது. ஆனைமலைக்கு நிதி நிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும்.
தி.மு.க., - துரை சந்திரசேகர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்ட வெட்டிக்காடு ஆய்வு மாளிகையின் ஓட்டு கட்டடம் இடிந்துள்ளது. புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
அமைச்சர் வேலு: ஆய்வு மாளிகை கட்ட வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.
திருச்சியில் கூடுதல் ஆய்வு மாளிகை கட்ட வேண்டும் என, அமைச்சர் நேருவும் கேட்டுள்ளார். ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - ஜோசப் சாமுவேல்: சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா சாலையில், பாடி முதல் அம்பத்துார் எல்லை வரை, 100 அடி அகலத்திற்கு விரிவுபடுத்தும் பணி துவக்கப்படாமல் உள்ளது.
போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர். விரைவில் பணி துவக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: அது மாநில நெடுஞ்சாலை. பாடி முதல் திருநின்றவூர் வரை, ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்த நிலம் எடுக்க, 168 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 14 கிராமங்களில் நிலம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.
இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். நிலம் எடுப்பு பணி முடிந்ததும், ஆறு வழிச்சாலை அமைத்து தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

