ADDED : ஏப் 11, 2025 08:15 PM
சென்னை:அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த, எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், எஸ்.டி.பி.ஐ., கட்சி இடம் பெற்றிருந்தது. தற்போது பா.ஜ., உடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளதால், கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ., கட்சி வெளியேறி உள்ளது. அக்கட்சி தலைவர் முபாரக் மற்றும் மாநில நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
இது குறித்து, முபராக் அளித்த பேட்டி:
வக்ப் திருத்த சட்டம், சிறுபான்மையின மக்களுக்கு விரோதமானது. மத சார்பின்மைக்கு எதிரானது. சட்டம் - ஒழுங்கை கெடுக்கக் கூடியதாக இருக்கிறது. சட்டசபையில் வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து, முதல்வர் ஸ்டாலின், துணிச்சலுடன் தீர்மானம் கொண்டு வந்தார். பார்லிமென்டில் தி.மு.க.,-எம்.பி.,க்கள், வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து ஓட்டளித்தனர். சட்டசபையில் வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, பா.ஜ., தவிர அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும், கவர்னர் நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றதற்கும், முதல்வரை சந்தித்து பாராட்டும், நன்றியும் தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

