திருப்பரங்குன்றம் மலை வழக்கில் எஸ்.டி.பி.ஐ., மனுவை ஏற்க மறுப்பு
திருப்பரங்குன்றம் மலை வழக்கில் எஸ்.டி.பி.ஐ., மனுவை ஏற்க மறுப்பு
ADDED : ஆக 26, 2025 03:21 AM

மதுரை : 'திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவது தொடர்பான வழக்கில் எஸ்.டி.பி.ஐ., தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்க நீதிபதி மறுத்து, இதில் அரசியல்கட்சிகளுக்கு இடமில்லை என கூறினார்.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைக் கண்ணன் தாக்கல் செய்த பொது நல மனு:
திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம்: மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேய ஆட்சியின் போது நீதிமன்றம் உத்தரவிட்டது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிடவும், மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல் நிவாரணம் கோரி வெவ்வேறு மனுக்கள் தாக்கலாகின. நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. ஜூன் 24ல் நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்ட உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அவர் நேற்றும் விசாரித்தார்.
தர்கா தரப்பு:
1920ல் அப்போதைய தேவஸ்தானம், திருப்பரங்குன்றம் மலை முழுதும் உரிமை கொண்டாடியது. நீதிபதி ராமய்யர் 30 நாட்கள் ஆய்வு செய்தார். மலையின் நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்கா வரையுள்ள படிக்கட்டுகள், நெல்லித்தோப்பில் அமைந்துள்ள மண்டபம், மலையின் வடக்கு உச்சியில் அமைந்துள்ள தர்காவைத் தவிர மற்ற பகுதிகள் தேவஸ்தானத்திற்கு சொந்தம் என தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் அவரவர் விருப்பங்களுக்கு விட்டுவிட வேண்டும். கடவுள்களோ, பக்தர்களோ சண்டையிடுவதில்லை. அரசியல்வாதிகளே சண்டையிடுகின்றனர்.
ஹிந்துக் கோயில் விழாக்களில் பக்தர்களுக்கு முஸ்லிம்கள் உணவு பரிமாறுகின்றனர். நெல்லித்தோப்பு மண்டபத்தில் ஹிந்து பக்தர்கள் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
அனைத்து மதங்களிலும் விருந்தும், விரதங்களும் உள்ளன. சைவ உணவிலும் உயிர்கொண்ட தாவரங்கள் கொல்லப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிட்டது.
இடையீட்டு மனு தாக்கல் செய்த வக்ப் வாரியத் தரப்பு:
மலையை ஹிந்துக்கள் ஸ்கந்தர் மலை எனவும், முஸ்லிம்கள் சிக்கந்தர் மலை எனவும் குறிப்பிடுகின்றனர். இதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
இயற்கை நமக்கு வழங்கிய மலையை அவரவர் விரும்பும் பெயர்களில் குறிப்பிடலாம். ஹிந்து, முஸ்லிம் பண்பாடுகள் இரண்டும் சமத்துவம், சகோதரத்துவத்தையே வலியுறுத்துகின்றன. வரையறுக்கப்பட்ட இடங்களுக்குள் அவரவர் விருப்பத்தின் பேரில் அழைத்துக் கொள்ளலாம். இவ்வாறு விவாதங்கள் நடந்தன.
எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயற்சித்தனர்.
நீதிபதி: இவ்வழக்கில் அரசியல் கட்சிக்கு என்ன பங்குள்ளது.
உங்களை அனுமதித்தால் அனைத்து கட்சிகளும் இவ்வழக்கு சம்பந்தமாக இடையீட்டு மனு தாக்கல் செய்வர். எனவே உங்கள் இடையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது.
மலை மீது விலங்குகளை பலியிடலாமா கூடாதா என்பது குறித்து கோயில் நிர்வாகம், பக்தர்கள், தர்கா நிர்வாகத்தினரிடையே சட்டப்படி தீர்வு காணப்படுவதற்கு தனிநபரால் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரித்து வருகிறோம்.
இதில் அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. உங்கள் தரப்புகளை தர்கா அல்லது வக்ப் வாரியம் மூலமாக தெரிவிக்கலாம். விசாரணை செப்., 1க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

