37 இடங்களில் குளம், குட்டை நிலங்கள் வகைப்பாடு மாற்றம் பட்டா வழங்க நடவடிக்கை
37 இடங்களில் குளம், குட்டை நிலங்கள் வகைப்பாடு மாற்றம் பட்டா வழங்க நடவடிக்கை
ADDED : டிச 06, 2025 01:53 AM
சென்னை: தமிழகத்தில் 37 இடங்களில் குளம், குட்டை நிலங்களை வகைப்பாடு மாற்ற, வருவாய் துறையின் உயர்நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை நகர்ப்புற வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவற்றை நகர்ப்புற வாழ்விட வாரியம் செயல்படுத்தியது.
இதில், பெரும்பாலான இடங்களில் பொது மக்கள் நீண்ட காலமாக ஆக்கிரமித்து, வீடு கட்டி வசித்த நிலங்கள் வருகின்றன.
வழி இல்லை இந்த நிலங்கள், குளம், குட்டை, நீர்ப்பிடிப்பு, ஊற்றுக்கால், கண்மாய் ஆகிய வகைப்பாடுகளில் உள்ளன. நீர்நிலை சார்ந்த இந்த வகைப்பாடு நிலங்களுக்கு பட்டா வழங்க, சட்டப்படி வழி இல்லை.
இதனால், இது போன்ற நிலங்களில் மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, பட்டா வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இது போன்ற நிலங்களை வகைப்பாடு மாற்றம் செய்வது தொடர்பாக முடிவெடுக்க, தலைமை செயலர் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் கூட்டம், அக்., 17ல் நடந்தது. அப்போது, நீர்நிலை வகைப்பாட்டில் உள்ள நிலங்கள் தொடர்பான 37 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில், குளம், குட்டை நிலங்களை, அரசு புறம்போக்கு நிலங்களாக வகைப்பாடு மாற்றம் செய்ய, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, வருவாய் துறை செயலர் அமுதா பிறப்பித்து உள்ளார்.
இந்த அரசாணையின் அடிப்படையில், வகைப்பாடு மாற்றப்பட்ட புறம்போக்கு நிலங் களுக்கு, பட்டா வழங்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சட்ட விரோத நடவடிக்கை? ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளை, எந்த காரணத்தை முன்னிட்டும் வகைப்பாடு மாற்றக்கூடாது என, அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, நீர்நிலைகளை வகைப்பாடு மாற்றி, பட்டா கொடுக்கும் பணிகளில் தமிழக அரசின் வருவாய் துறை ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல், நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு, இந்த அரசாணை பின்னடைவாக அமைந்துவிடும் என அவர்கள் கூறினர்.

