1.55 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை: கயல்விழி
1.55 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை: கயல்விழி
UPDATED : ஏப் 17, 2025 02:54 AM
ADDED : ஏப் 17, 2025 12:35 AM
சென்னை:தமிழகத்தில், 1.55 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி கூறினார்.
சட்டசபையில், அவர் கூறியதாவது:
தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக, இதுவரை, 8,015 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், காலாஞ்சிபட்டியில் ஒருங்கிணைந்த பயிற்சி மையம் புதிதாக செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள், போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் நோக்கத்தில், காணொலி காட்சிகள் வாயிலாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக, 9,532 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. சமூக நலத்துறை வாயிலாக, 16,780; அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக, 72; நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக, 2,104; கூட்டுறவு துறை வாயிலாக, 3,353; ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 7,535 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்தமாக, 1.55 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 41.3 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், 2.50 லட்சம் பேர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.