புதிய அடுக்குமாடி திட்டங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ., பெற நடவடிக்கை
புதிய அடுக்குமாடி திட்டங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ., பெற நடவடிக்கை
ADDED : ஆக 17, 2026 04:10 AM

சென்னை: ஏழை மக்களுக்காக கட்டப்படும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு, எப்.எஸ்.ஐ., எனப்படும், கூடுதல் தளபரப்பு குறியீடு பெற, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி, ஒவ்வொரு கட்டடத்துக்குமான எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீடு வரையறுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2,400 சதுரடி அளவுள்ள நிலத்தில், அடுக்கு மாடியாக, 4,800 சதுரடி வரை, அதாவது இரண்டு கட்டடங்கள் கட்ட முடியும்.
பெரிய அளவிலான அடுக்குமாடி கட்டடங்களுக்கு, மனை அளவு, முகப்பு அளவு, அணுகு சாலையின் அகலம் அடிப்படையில், தளபரப்பு குறியீடு மாறுபடும். அந்த வகையில் அதிகபட்சமாக, 3.25 மடங்கு வரை, தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படும்.
இதற்கு மேல் தளபரப்பு குறியீடு தேவைப்பட்டால், தனியார் கட்டுமான நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி பெற வாய்ப்பு உள்ளது.
ஆனால், ஏழை மக்களுக்காக மானிய உதவியுடன், வீடு கட்டும் நகர்ப்புற வாழ்விட வாரிய திட்டங்களுக்கு, கூடுதல் செலவில் தளபரப்பு குறியீடை வாங்க முடியாத நிலை உள்ளது.
இதை கருத்தில் வைத்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, குறிப்பிட்ட சில இடங்களில் பயன்படுத்தாத காலி நிலங்களை, பொது பயன்பாட்டுக்கு கொடுத்து, கூடுதல் தளபரப்பு குறியீடை பெறும் வசதியை உருவாக்கியது.
இந்த வசதியை பயன்படுத்த, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகர்ப்புற வாழ்விட வாரியத்தால் செயல்படுத்தப்படும் அடுக்குமாடி திட்டங்களுக்கு, கூடுதல் எப்.எஸ்.ஐ., பெற வேண்டிய தேவை எழுந்துள்ளது.
வாரியத்திடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நிலங்களை, பூங்கா அமைப்பது போன்ற பொது திட்டங்களுக்கு கொடுத்து, கூடுதல் தளபரப்பு குறியீடு பெற திட்டமிட்டு இருக்கிறோம்.
இது விஷயத்தில் கூடுதல் தளபரப்பு குறியீட்டுக்கு, அரசிடம் இருந்து சலுகைகள் பெறவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், கூடுதல் செலவின்றி அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
