'தமிழகத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை': அமைச்சர் பொன்முடி தகவல்
'தமிழகத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை': அமைச்சர் பொன்முடி தகவல்
ADDED : ஏப் 08, 2025 01:26 AM
சென்னை : ''தமிழகத்தில் பசுமை பரப்பை, 23.7 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக உயர்த்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என, வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
பா.ம.க., - ஜி.கே.மணி: பசுமை பரப்பை அதிகரித்து, காலநிலை மாற்றத்தின் வீரியத்தை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் பொன்முடி: தமிழகத்தில் பசுமை பரப்பை, 23.7 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்த, 2021ல் பசுமை தமிழகம் இயக்கம் துவங்கப்பட்டது.
சுற்றுச்சூழலை பாதுகாத்தல், புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துதல், பசுமை பரப்பை அதிகரிப்பது போன்றவை இதன் நோக்கம். இதற்காக, 10 ஆண்டுகளில், 265 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், 36 மாவட்டங்களில், 310 நாற்றங்காலில், 33.23 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன், 25 கோடி ரூபாயில், 100 மரகத பூஞ்சோலைகள், 2021ல் அறிவிக்கப்பட்டு, 83 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் உயிர் அரண் ஏற்படுத்தும் திட்டம், 25 கோடி ரூபாயில் நடந்து வருகிறது.
சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை மாவட்டங்களில், நகரமயமாதலால் வனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அவற்றை மீட்டெடுக்க, 'ஆதிவனம் மேம்பாட்டு திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஜி.கே.மணி: இது, வரவேற்கத்தக்கது. சுற்றுச்சூழல் கேடு அனைத்து வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத்தடுக்க, பசுமை பரப்பை தீவிரமாக அதிகரிக்க வேண்டும். தர்மபுரி உள்ளிட்ட வறண்ட மாவட்டங்களில், மரகத பூஞ்சோலைகள் அதிகம் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்புக்கு அரசு நடவடிக்கை எடுத்தாலும், அனைத்து இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. இதை உற்பத்தி செய்யும் இடத்தில் தடுக்க வேண்டும்.
அமைச்சர் பொன்முடி: மரகத பூஞ்சோலைகள் தேவைப்படும் இடங்களில் உருவாக்கப்படும்.
தி.மு.க., - சந்திரகுமார்: மரக்கன்றுகளை நான்கு, ஐந்து மாதங்கள் வளர்த்து கொடுக்கிறோம். வெளிநாடுகளில், ஐந்து ஆண்டுகள் வளர்த்து, அதன்பிறகு நட்டு பராமரிக்கின்றனர். அதை பின்பற்ற வேண்டும்.
அமைச்சர் பொன்முடி: மரக்கன்றுகள் நடுவதற்காகவே, பசுமை இயக்கத்தை துவக்கினோம். இதுவரை, 1,606 ஏக்கர் அலையாத்தி காடுகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன. புதிதாக, 766 ஏக்கரில், 12 மாவட்டங்களில் அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சவுக்கு, பனை, முந்திரி மரக்கன்றுகள் கடற்கரையோரங்களில் நடப்பட்டு, 711 ஏக்கர் பரப்பில் உயிர் அரண் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

