மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் 50 இடங்களில் அமைக்க நடவடிக்கை
மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் 50 இடங்களில் அமைக்க நடவடிக்கை
ADDED : ஜூலை 25, 2025 01:11 AM

சென்னை:தமிழகத்தில், புதிதாக 50 இடங்களில் தானியங்கி முறையில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்கள் அமைக்கும் பணியை, சுற்றுச்சூழல் துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை, சுற்றுச் சூழல் துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மேற்கொண்டுள்ளன.
மக்கள் துணிப் பைகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை, சுற்றுச்சூழல் துறை 2021ல் துவங்கியது. பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில், மஞ்சப்பை வழங்கும், தானியங்கி இயந்திரங்கள் அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டது.
இந்த இயந்திரங்களில், 10 ரூபாயை செலுத்தி, துணியால் தயாரிக்கப்பட்ட மஞ்சள் நிறப் பையை பெறலாம்.
இதற்கு பல்வேறு இடங்களில், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுதும் தற்போதைய நிலவரப்படி, 221 இடங்களில், மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும், 40 இடங்களில் இதற்கான இயந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மேலும் 50 இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளதாக, சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

