பங்கு சந்தை ஆசைகாட்டி ரூ.14 கோடி சுருட்டல்; சைபர் குற்றவாளிகள் ஆறு பேர் கைது
பங்கு சந்தை ஆசைகாட்டி ரூ.14 கோடி சுருட்டல்; சைபர் குற்றவாளிகள் ஆறு பேர் கைது
ADDED : அக் 22, 2024 02:24 AM

சென்னை : பங்கு சந்தையில் முதலீடு செய்தால், 500 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி, மொபைல் போன் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து, 14 கோடி ரூபாய் மோசடி செய்த ஆறு பேரை, மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நடப்பு ஆண்டு ஏப்ரலில், சேலத்தை சேர்ந்த, 62 வயது ஜவுளி வர்த்தகரை, சைபர் குற்றவாளிகள், 'வாட்ஸாப்' வாயிலாக தொடர்பு கொண்டனர்.
20 சதவீதம் கமிஷன்
அவர்கள், 'பிளாக் ராக் அசெட் மேனேஜ்மென்ட் பிசினஸ் ஸ்கூல்' என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.
இதற்கு, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான, 'செபி' ஒப்புதல் அளித்து இருப்பதாகவும், எங்கள் நிறுவனம் வாயிலாக பங்கு சந்தையில் முதலீடு செய்தால், 500 மடங்கு லாபம் கிடைக்கும். அதற்காக எங்களுக்கு, 20 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என, கூறியுள்ளனர்.
அவரை மூளைச்சலவை செய்து, தங்கள் நிறுவனம் பெயரில் உள்ள, மொபைல் போன் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர்.
அந்த செயலி வாயிலாக முதலீடுகள் பெற்று, அதிக லாபம் கிடைத்து இருப்பது போல, தொழில் வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி நம்ப வைத்துள்ளனர். இதனால், சைபர் குற்றவாளிகளை நம்பி, 14 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
பணம் திரும்ப கிடைக்காததால், மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்து, தேசிய சைபர் குற்றப்பிரிவு ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் புகார் அளித்துள்ளார்.
விசாரணை
அது, சென்னை அசோக் நகரில் செயல்படும், மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், எஸ்.பி., அசோக்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
மோசடி பணத்தை வரவு வைத்த வங்கி கணக்கு வாயிலாக துப்பு துலக்கி, சென்னை நீலாங்கரையை சேர்ந்த மதன், 43, திருநின்றவூர் சரவணபிரியன், 34, ஆவடி சதீஷ் சிங், 46, புளியந்தோப்பு ஷாபகத், 38, மதுரை பொன்மேனியை சேர்ந்த மணிகண்டன், 30, செங்கல்பட்டு பெருமாட்டு நல்லுாரை சேர்ந்த சுப்பிரமணியன், 39 ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்களை வடமாநில கும்பல் இயக்கி வந்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலர்
மேலும், மோசடி பணத்தில் சுப்பிரமணியன் வங்கி கணக்கில், 21.50 லட்சம் ரூபாய் பதுக்கி வைத்திருப்பதும், கைதான மணிகண்டன், ஷபாகத் வாயிலாக அமெரிக்க டாலராக மாற்ற முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் மோசடிக்கு பயன்படுத்திய, 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வடமாநில கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.