sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புயல், மழையால் கடலுார் முதல் சென்னை வரை...ஸ்தம்பித்தது

/

புயல், மழையால் கடலுார் முதல் சென்னை வரை...ஸ்தம்பித்தது

புயல், மழையால் கடலுார் முதல் சென்னை வரை...ஸ்தம்பித்தது

புயல், மழையால் கடலுார் முதல் சென்னை வரை...ஸ்தம்பித்தது

13


UPDATED : நவ 30, 2024 11:15 PM

ADDED : நவ 30, 2024 11:08 PM

Google News

UPDATED : நவ 30, 2024 11:15 PM ADDED : நவ 30, 2024 11:08 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்ன : வங்கக்கடலில் உருவான புயல் மற்றும் மழையால், கடலுார் முதல் சென்னை வரை மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது. சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், வீதிகள் வெள்ளக்காடாக மாறின; பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியது, விமான நிலையம் மூடப்பட்டது.

வங்கக்கடலில் உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த, 'பெஞ்சல்' புயல், நேற்று மேற்கு திசையில் நகர துவங்கியதால், எதிர்பார்த்தபடி கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டது. மாலை 5:30 மணிக்கு புதுச்சேரி அருகே புயல் கரை கடக்க துவங்கியது.

விடுமுறை


இப்புயலால், நேற்று முன்தினம் முதல் கடலோர மாவட்டங்களில், கனமழை பெய்தது; காற்றின் வேகமும் அதிகமாக இருந்தது. எட்டு மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தின. மக்கள் வீடுகளில் முடங்கினர்.

Image 1351068


சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய கனமழை, நேற்றும் தொடர்ந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Image 1351069


மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, ரன்வேயில் நீர் தேங்கியதால், சென்னை விமான நிலையம் மூடப்பட்டது; விமானங்கள் இயக்கப்படவில்லை. ரயில், பஸ்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

டிரைவர்கள் வராததால், குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. சில இடங்களில் பஸ்கள் பள்ளத்தில் சிக்கியதை காரணம் காட்டி, பணிமனைக்கு வந்த டிரைவர்கள் பஸ்களை எடுக்க மறுத்தனர். அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சு நடத்திய பிறகே, பஸ்கள் இயங்கின.

Image 1351070


பெரும் செலவில் மழை நீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணிகள் செய்துள்ளதால், நகரில் எங்குமே தண்ணீர் தேங்காது என அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறி வந்தனர்.

பலன் இல்லை


அதை முற்றிலும் மறுக்கும் வகையில், நகரில் ஏராளமான பகுதிகளில், சாலைகள் நீரில் மூழ்கின. அண்ணா சாலை, ஓ.எம்.ஆர் சாலை, ஜி.எஸ்.டி., சாலை போன்ற அகலமான சாலைகளிலும் தரை தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.

நகரம் முழுதும் மோட்டார் வைத்து குழாய்கள் வழியாக தண்ணீரை உறிஞ்சி அகற்றும் பணி நடப்பதை பார்க்க முடிந்தது. ஆனால், உறிஞ்சிய தண்ணீரை சாலையின் மறுபக்கமே விட்டதால், எந்த பலனும் இல்லாமல் போனதை மக்கள் பார்த்தனர்.

வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளிலும், மழை நீரை வெளியேற்றும் முயற்சியில் இதே பிரச்னை தெரிந்தது. வடிகால்கள் ஏற்கனவே நிரம்பி செல்வதால், மோட்டார் வைத்து உறிஞ்சும் நீரை விடுவதற்கு இடமில்லை.

Image 1351071


'ஆக்கிரமிப்புகள் அடியோடு ஒழிக்கப்படும் வரையில், வடிகால் மற்றும் சாக்கடை அடைப்புகள் தொடரத்தான் செய்யும். மழை நீர் செல்ல வழியே இல்லை' என, ஒரு சில அதிகாரிகள் விரக்தியுடன் குறிப்பிட்டனர்.

வெளியூர்களில் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்த டிராக்டர்களை எல்லாம், சென்னை மாநகராட்சி தேவைக்காக வரவழைத்தும், தண்ணீர் தேங்கும் பிரச்னையை தீர்க்க முடியாமல் போனதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இன்றும் மழை தொடர்ந்தால், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த சூழ்நிலையில், கடலோர மாவட்டங்களுக்கு, மேலும் ஒரு நாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை சென்னைக்கு, 110 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு, 120 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.

பின்னர் அது, வடமேற்கு திசையில் இருந்து விலகி, மேற்கு திசையில் நகர துவங்கியது. மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, நேற்று மாலை கரையை கடக்ககூடும் என, கணிக்கப்பட்டது.

அதன்படி, மாலை ஐந்தரை மணி தாண்டியதும், புதுச்சேரி அருகே புயல் கரை கடக்க துவங்கியது என, வானிலை மையம் ஏழு மணிக்கு தெரிவித்தது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில், 21 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று, 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருப்பத்துார், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், 12 செ.மீ., வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில், கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

புயல் கரையை கடந்தாலும், தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரத்தில் இன்றும், நாளையும் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என, வானிலை மையம் கூறியுள்ளது.

20 கிராமங்கள் துண்டிப்பு

மரக்காணம் பகுதியில், மூன்று இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு, 20 கிராமங்களுக்கு போக்குவரத்து முடங்கியது.பகிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அனுமந்தையில் இருந்து வண்டிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கழுவெளி ஏரியில் வெள்ளம் அதிகரித்தது.இதனால், 10க்கு மேற்பட்ட கிராம மக்கள் மரக்காணம் வழியாக, 15 கி.மீ., துாரம் சுற்றி புதுச்சேரி செல்கின்றனர். இந்த வழியாக, அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மரக்காணம் அடுத்த கானிமேட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி, இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அங்கு போடப்பட்ட தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால், ஐந்து கிராம மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். அதேபோல், சொரப்பட்டு கிராமத்தில் இருந்து, ஆடவல்லிக்கூத்தான் கிராமம் செல்லும் வழியில் மேம்பாலம் கட்டும் பணியும் கிடப்பில் போடப்பட்டதால், அங்கு அமைத்த தற்காலிக சாலையும் வெள்ளத்தில் மூழ்கியது.சொரப்பட்டு, வங்காரம் உட்பட, ஐந்து கிராம மக்கள், 10 கி.மீ., துாரம் சுற்றி, திண்டிவனம், மரக்காணம் செல்கின்றனர்.



28 கிராமங்களில் கடல் சீற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட, 28 கடலோர கிராமங்களில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சின்னங்குடி உள்ளிட்ட சில கிராமங்களில் கரையைக் கடந்து, கடல் நீர் உப்பு புகுந்ததால், மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தரங்கம்பாடியில் கடல் அலைகள் டேனிஷ் கோட்டை பாதுகாப்பு சுவரை தாக்கிய நிலையில், சுற்றுலா பயணியரை போலீசார் திருப்பி அனுப்பினர். மீனவர்கள் 9வது நாளாக நேற்றும் கடலுக்கு செல்லவில்லை.



கரையை கடக்க பல மணி நேரம்

புயல் கரையை கடக்கும் நிகழ்வு முழுமையாக முடிய, நான்கு முதல் ஆறு மணி நேரமாகலாம். கடலில் இருக்கும் போது இதன் சுற்றளவு, 10 கி.மீ., வரை பரவி இருக்கும் என்பதால், முழுமையாக கரையை கடப்பதில் தாமதம் ஏற்படுவது வழக்கம். புயலை சுற்றி இருக்கும் மேக கூட்டங்களின் அடர்த்தி அடிப்படையில், மழை பொழிவு அதிகரிக்கும் அல்லது குறையும். மேக அடர்த்தி குறையும் போது மழை குறைந்து விடும். சென்னை நுங்கம்பாக்கத்தில், நேற்று காலை நிலவரப்படி, தரைக்காற்று வேகம் மணிக்கு, 50 கி.மீ., ஆக பதிவாகி உள்ளது.








      Dinamalar
      Follow us