ADDED : மார் 21, 2025 03:09 AM

மேட்டுப்பாளையம்,:கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி பொதுச் செயலர் மற்றும் உறுப்பினர் வீடுகளில், 8 மணி நேரம் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், இருவரின் டிஜிட்டல் பரிவர்த்தனை தகவல்களை, அமலாக்க துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நியூ எக்ஸ்டென்ஷன் 1வது வீதியில் வசிப்பவர் ராஜிக், 35; கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி வடக்கு மாவட்ட பொதுச்செயலர். இவர், சிறுமுகை சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில், கார் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகிறார்.
நேற்று காலை 8:00 மணிக்கு இவரது வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் வந்து, சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டின் முன்பாக துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் வீட்டின் முன் நின்று, அமலாக்க துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
நியூ எக்ஸ்டென்ஷன் இரண்டாவது வீதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினர் வாஹித் ரகுமான் வீட்டிலும், அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மாலை, 4:00 மணிக்கு அமலாக்கத்துறையினர் ராஜிக் வீட்டிலிருந்து சோதனை முடித்து வெளியே வந்தனர். எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டனர். வாஹித் ரகுமான் வீட்டில் மாலை 5:00 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.
எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் இருவர் வீடுகளிலும் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிய வருகிறது.
ஒருவர் கைது
சோதனையை அடுத்து, சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வாஹித் ரகுமானை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் இருந்தபோது, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவருக்கு சொந்தமான பிளைவுட் கடையினுள் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் என்.ஐ.ஏ.,வால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டவர்.