2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் : தனியார் ஆலை ஊழியர்கள் மயக்கம்
2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் : தனியார் ஆலை ஊழியர்கள் மயக்கம்
ADDED : செப் 27, 2011 11:43 PM

திருநெல்வேலி: வி.கே.புரம் மில் தொழிலாளர்களின் 2ம் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில், நான்கு பேர் மயங்கி விழுந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் மில்லில், நிரந்தர தொழிலாளர்களாக 800 பேரும், தினசரி தொழிலாளர்களாக 1,500 பேரும் பணிபுரிகின்றனர். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, ஊதிய உயர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் 2012ல் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், முன்னதாகவே சம்பள உயர்வு தர வேண்டும் என, தொழிற்சங்கங்களைச் சேராத தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு நிர்வாகம், புதிய முறையில் வருகைப் பதிவுக்கு ஏற்ப, சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்தது. இந்த ஊக்கத்தொகை அடுத்த ஆண்டில் நிறைவேற்ற உள்ள சம்பள உயர்வை பாதிக்கும் எனக்கூறி, நேற்று முன்தினம்(திங்கள்) முதல் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் துவக்கினர். நேற்று இரண்டாவது நாளாக, போராட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் தொடர்ந்தனர். அவர்களில் மோகன், மகராஜன், கோமதிநாயகம் உள்ளிட்ட சில தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள், சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்ப பெண்கள், பச்சிளம் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா, மில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தினார். சுமுக தீர்வு ஏற்படவில்லை. எனவே, பேச்சுவார்த்தையை முடித்துத் தருமாறு கூறி, தொழிலாளர்களின் குடும்ப பெண்கள், எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உள்ளிருப்புப் போராட்டத்தால் 2 நாட்களாக மில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பிரச்னை ஏற்படாவண்ணம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.