21 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி; அகற்றி டாக்டர்கள் சாதனை
21 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி; அகற்றி டாக்டர்கள் சாதனை
UPDATED : பிப் 20, 2025 03:34 PM
ADDED : பிப் 20, 2025 08:49 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயது நபர், ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது விழுங்கிய பேனா மூடி, 21 ஆண்டுகளாக அவரது நுரையீரலில் சிக்கி இருந்தது. அதை கண்டுபிடித்து மருத்துவர்கள் அகற்றினர்.
தெலுங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்த 26 வயதான நபர் ஒருவர் 5 வயதில் தற்செயலாக பேனா மூடியை விழுங்கி உள்ளார். இதை அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அப்போதைக்கு உடல் நல பாதிப்பு எதுவும் ஏற்படாததால், சிறுவன் தவறாக ஏதோ சொல்கிறான் என்று எண்ணி பெற்றோர் அமைதியாக இருந்து விட்டனர். அதன் பிறகு குடும்பத்தினர் அனைவரும் அதை மறந்து விட்டனர்.
சிறுவன் வளர்ந்து வாலிபர் ஆன நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உடல் எடைக் குறைந்து கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சையில் நுரையீரலில் பேனா மூடி சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை டாக்டர்கள் வெற்றிக்கரமாக அகற்றி உள்ளனர்.இது குறித்து நுரையீரல் நிபுணர் டாக்டர் சுபகர் நாதெல்லா கூறியதாவது: கடந்த 10 நாட்களாக நோயாளியின் நிலை மோசமடைந்து அடைந்தது. தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது என்றார்.
சி.டி., ஸ்கேன் எடுத்ததில் அவரது இடது கீழ் நுரையீரலில் தொற்று இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் ஒரு அடைப்பு இருப்பதாக நாங்கள் சந்தேகித்தோம். ஆனால் உள்ளே ஒரு பேனா மூடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இன்னும் சில ஆண்டுகள் ஆகியிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெற்றிக்கரமாக பேனா மூடியை அகற்றிய டாக்டர்கள் உறவினர்களிடம் பேசி உள்ளனர். அப்போது, மூத்த சகோதரர் தனது தம்பி ஐந்து வயதில், தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கியதை நினைவு கூர்ந்தார். பேனா மூடியால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பிற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது நோயாளி முழுமையாக குணமடைந்துள்ளார்.