ADDED : மே 28, 2024 05:03 PM
புதுக்கோட்டை: திருச்சியை சேர்ந்த முத்துகுமார், 30, என்பவர் காரைக்குடியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி, பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இதனிடையே அவருக்கும் அக்கா மகளான சுபஸ்ரீ, 20, என்பவருக்கும் காதல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை வெள்ளாறு பாலம் அருகே உள்ள பிரபல தனியார் நர்சிங் கல்லுாரி விடுதியில் தங்கி சுபஸ்ரீ மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் நேற்று இரவு, முத்துக்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுபஸ்ரீயின் சித்தி ஒருவர், அவரை அழைத்து போக நர்சிங் கல்லுாரிக்கு காலை வந்துள்ளார். அப்போது, முத்துக்குமார் இறந்த செய்தியை கேட்ட அவர் மனம் உடைந்து விடுதி அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
சந்தேகம் அடைந்த விடுதி வார்டன் அறை கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால், உடைத்து உள்ளே சென்றனர். சுடிதார் துப்பட்டாவால், துாக்கிட்டுக் கொண்ட சுபஸ்ரீ, உயிருக்கு போராடியுள்ளார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், முன்னதாகவே சுபஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நமணசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.