'எறும்பு கடித்ததால் மாணவர் இறப்பா...: சினிமாவில் காட்டினால் கூட நம்ப மாட்டாங்க'
'எறும்பு கடித்ததால் மாணவர் இறப்பா...: சினிமாவில் காட்டினால் கூட நம்ப மாட்டாங்க'
ADDED : பிப் 18, 2025 07:18 AM

சென்னை; 'எறும்பு கடித்து கல்லுாரி மாணவர் இறந்ததாக கூறுவதை, சினிமாவில் காட்சியாக வைத்தால்கூட யாரும் நம்ப மாட்டார்கள்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருநெல்வேலியில், விக்னேஷ் என்ற மாணவர் கல்லுாரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்த அவரது தாய், கழிப்பறையில் அதிக அளவு ரத்தம் இருந்தது குறித்து கேட்க, 'எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்' என்று பொறுப்பற்ற முறையில், தி.மு.க., அரசின் காவல் துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தி.மு.க., ஆட்சியில், காவல் துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறி விட்டது. எறும்பு கடித்ததால் ரத்தம் சிந்தி, மாணவர் இறந்ததாத காவல் துறை கூறுவதை, சினிமாவில் காட்சியாக வைத்தால் கூட, யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.
பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவர் விக்னேஷின் மரணத்தில், உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப, தி.மு.க. அரசு முயற்சித்தால், அது கடும் கண்டனத்திற்குரியது.
முறையான விசாரணை நடத்தி மரணத்திற்கான காரணத்தை கண்டறிந்து, அதில் யாருக்காவது தொடர்பிருந்தால், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

