மாமல்லையில் அலையில் சிக்கி மாணவர் பலி; 4 பேர் மாயம்
மாமல்லையில் அலையில் சிக்கி மாணவர் பலி; 4 பேர் மாயம்
ADDED : மார் 03, 2024 04:19 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி, ஆந்திர கல்லுாரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் மாயமாகினர்.
ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில் செயல்படும் இரு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள், 35 பேர், மாணவியர் ஏழு பேர் என, மொத்தம், 42 பேர் நேற்று அதிகாலை மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.
இரு கல்லுாரி மாணவர்களும் கடற்கரை கோவில் அருகே காலை 7:15 மணிக்கு கடலில் குளித்தனர். அப்போது, ஏற்பட்ட திடீர் சுழலில் சிக்கி மாணவர்கள் சிலர் தத்தளித்தனர். அதைப்பார்த்த, கடலோரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் சிலர், உடன் கடலில் குதித்து தத்தளித்த மாணவர்களில் ஆறு பேரை மீட்டனர்.
இருப்பினும், கடலில் குளித்த இரு கல்லுாரி மாணவர்களில், எஸ்.வி.சி.ஆர்., என்ற கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் விஜய், 18, பரிதாபமாக உயிரிழந்தார். அதே கல்லுாரியைச் சேர்ந்த பி.ஏ., இரண்டாம் ஆண்டு மாணவர்கள், மோனிஷ், 18, பார்து, 19 மற்றும் பென்னா கல்லுாரி என்ற மற்றொரு கல்லுாரியில் பி.எஸ்சி., படிக்கும் மாணவர்கள் பெத்துராஜ், 21, சேஷாரெட்டி, 19, ஆகியோர் மாயமாகினர்.
மாயமானவர்களை தேடும் பணியில், கடலோரக் காவல் படையினர், கப்பல் படையினர் ஈடுபட்டு உள்ளனர். சம்பவம் தொடர்பாக, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். மீட்கப்பட்ட மாணவர்களில், கார்த்திக், 19, என்பவர் மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

