UPDATED : நவ 28, 2026 09:38 PM
ADDED : நவ 28, 2026 09:36 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில், கல்லுாரி மாணவி லாவண்யா, 19, என்பவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால், அவரது கால் அகற்றப்பட்ட நிலையில் இழப்பீடாக, 25 லட்சம் ரூபாய் வழங்க, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
ஞானப்பாபுரத்தை சேர்ந்த லாவண்யா, தனியார் கல்லுாரியில் படித்தார். கடந்த, 2024 நவ., 8ல் அப்பகுதியில் மொபட்டில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில், வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தி.மலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லாவண்யாவுக்கு, முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவரின் வலது காலை மருத்துவர்கள் பரிசோதித்து அகற்றினர்.
தி.மலை அரசு மருத்துவமனையிலில் தனக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என, தி.மலை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், லாவண்யா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, நீதிபதி மீனாட்சி சுந்தரம், உறுப்பினர் விஜயா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
பாதிக்கப்பட்ட லாவண்யாவிற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவுக்கு, 25 ஆயிரம் ரூபாயும் தி.மலை அரசு மருத்துவமனை டீன், கண்காணிப்பு அலுவலர், குடியிருப்பு அலுவலர் ஆகியோர் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
