ஆசிரியர்களை இடம் மாற்றக்கோரி வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்
ஆசிரியர்களை இடம் மாற்றக்கோரி வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்
UPDATED : நவ 24, 2026 06:56 PM
ADDED : நவ 24, 2026 06:56 PM

அரியலுார்: அரசு பள்ளியில், ஜாதி ரீதியாக, இரு பிரிவாக செயல்படும் ஆசிரியர்களை இடம் மாற்றக்கோரி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
அரியலுார் மாவட்டம், தத்தனுார் கீழவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் என்பவரது மேஜையில், மனித கழிவு இருந்ததாக, நவ., 10ல் புகார் எழுந்தது.
பள்ளியில் விசாரணை நடத்திய அரியலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால், நவ., 18ல், தலைமை ஆசிரியர் முருகன், சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் ஆகியோரை, பணியிடம் மாற்றம் செய்தார்.
இந்நிலையில், ‘பள்ளி அலுவலகத்தில், மனித கழிவு வைத்த மர்ம நபரை கைது செய்ய வேண்டும். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஜாதி ரீதியாக இரு பிரிவாக செயல்படுவதால், அனைத்து ஆசிரியர்களையும் இடம் மாற்றம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி, நேற்று முன்தினம், மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இரண்டாவது நாளாக நேற்று, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
