ADDED : ஜூன் 01, 2025 04:32 AM

சென்னை : 'பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி, அரசு பஸ்களில் பயணிக்கலாம்' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளும், அதன்பின் கல்லுாரிகளும் திறக்கப்பட உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ், அவர்களின் பள்ளி, கல்லுாரிகளில், இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
அதுவரை, கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து, அரசு பஸ்களில் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்.
பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில், பஸ்கள் சரியாக இயக்கப்படுவதை கண்காணிக்க அலுவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
உரிய பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி, மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிச் செல்ல, அனைத்து அரசு போக்குவரத்து கழக நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.