மருத்துவ கவுன்சில் அலட்சியம்; மாணவர்கள் கடும் அதிருப்தி
மருத்துவ கவுன்சில் அலட்சியம்; மாணவர்கள் கடும் அதிருப்தி
ADDED : டிச 10, 2025 06:28 AM

சென்னை: 'தற்காலிக பதிவு சான்றிதழ் வழங்காமல், மருத்துவ கவுன்சில், எங்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது' என, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க, வெளிநாட்டு பிரிவு செயலர் வசந்த் பிலிப் அபிஷேக் கூறியதாவது:
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்க, தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் படித்தவர் களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி கட்டாயம் என்கின்றனர்.
குறிப்பாக, மாவட்ட அரசு மருத்துவமனைகளில், வெளிநாடுகளில் படித்தவர்கள், பயிற்சி டாக்டராக பணியாற்றலாம் என, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது.
அதை நடைமுறைப்படுத்தாமல், தமிழக மருத்துவ கவுன்சில் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. அதேபோல், 11 புதிய கல்லுாரிகளிலும், வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் பயிற்சி பெற அனுமதி வழங்குவதில்லை.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை, அவமானப்படுத்தும் வகையில், அலட்சியமாகவும், பாரபட்சமாகவும் செயல்படுகிறது.
இதை கண்டித்து ஜன., 6ம் தேதி, சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

