கரிவலம்வந்தநல்லுார் அகழாய்வில் படிக்கிணறு கண்டுபிடிப்பு
கரிவலம்வந்தநல்லுார் அகழாய்வில் படிக்கிணறு கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 06, 2026 12:51 AM

சென்னை: தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அகழாய்வில், சங்க காலத்தைச் சேர்ந்த படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கரிவலம்வந்தநல்லுார் அகழாய்வு இயக்குநர் யதீஸ்குமார் கூறியதாவது:
கரிவலம்வந்தநல்லுாரில், காரிச்சாத்தான் மலையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், 18 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு பணிகள் நடக்கின்றன.
2 அடி அகலம் தெற்கு பகுதியில் வாழ்விடமும், வடக்கு பகுதியில் புதைப்பிடமும் வெளிப்பட்டுள்ளது.
வாழ்விட பகுதியில், 3 மீட்டர் ஆழம் வரை செய்யப்பட்டுள்ள அகழாய்வில், மேல்மட்டத்திலிருந்து கீழாக சங்க காலம், இரும்பு காலம் மற்றும் நுண்கற்காலத்தைச் சேர்ந்த தொல் பொருட்கள் வெளிப் பட்டுள்ளன.
வாழ்விட பகுதியில் வெளிப்பட்டுள்ள செங்கல் கட்டுமானம், படிக்கிணறு என்பது உறுதியாகி உள்ளது.
இதன் படிகள் ஒவ்வொன்றும், 2 அடி அகலம் உள்ளன. அதில் பயன் படுத்தப்பட்டுள்ள செங்கல் ஒவ்வொன்றும் தலா 40 செ.மீ., நீளம்; 20 செ.மீ., அகலம்; 7 செ.மீ., தடிமனுடன் உள்ளதுடன், சங்க காலத்தைச் சேர்ந்தவை.
இங்கு தற்போது, 2 மீட்டர் ஆழம் வரை அகழாய்வு நடந்துள்ளது. இன்னும் படிக் கிணறின் தொடர்ச்சி கீழே செல்கிறது.
கிணற்றின் கட்டுமானத்தை வலுப்படுத்தும் வகையில், நீள்வாக்கில் இரண்டு செங்கற்களும், கிடைவாக்கில் ஒரு செங்கல்லும் அடுக்கப்பட்டு, இணைப்பாக களிமண் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீரின் கறை வெளிப்பட்டுள்ள படிக்கட்டுகள் தேய்ந்திருப்பதால், இந்த கிணறு மக்களின் பயன்பாட்டில் வெகு காலம் இருந்துள்ளதையும், கிணற்றின் சுவரில், நீரின் கறை வரி வரியாக உள்ளதால், நீர் மட்டம் மழை காலத்தில் உயர்ந்தும், கோடை காலத்தில் இறங்கியும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
இந்த கிணறு, வைப்பாறின் துணையாறான நிச்சப்பா நதியின் வழித்தடத்தில் உள்ளது.
இதேவாழ்விட பகுதியில், சங்க காலத்தை சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் தக்களிகள், சூதுபவளம், கண்ணாடி மற்றும் சுடுமண் மணிகள், இரும்பு, செம்பு பொருட்கள், நொண்டி விளையாடும் வட்டச்சில்லுகள் உள்ளிட்ட தொல்பொருட்களும் கிடைத்துள்ளன.
இது, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் சங்க காலம் வரை, மக்கள் வாழ்ந்த வளமான ஊராக இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
