UPDATED : ஜன 26, 2023 07:29 PM
ADDED : ஜன 26, 2023 06:02 PM

வேலூர் : தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனது அதிரடியான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த மூத்த ஸ்டன்ட் இயக்குனர் ஜூடோ கே.கே ரத்தினம்(93) வயதுமூப்பால் காலமானார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம். 1959ல் தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர் 1966ல் வல்லவன் ஒருவன் படம் மூலம் ஸ்டன்ட் இயக்குனராக மாறினார். அந்தக்கால சிவாஜி, எம்ஜிஆர் தொடங்கி ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அனேக நடிகர்களின் படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இன்னும் சில மொழிகளிலும் ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளார். கடைசியாக சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடித்த தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி தனது சொந்த ஊரான குடியாத்தம் தரணம்பேட்டையில் வசித்து வந்தார்.
சமீபத்தில் வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இவரது உயிர் இன்று(ஜன., 26) பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1980 ம் ஆண்டு ஒத்தையடி பாதையிலே என்ற படத்தை தயாரித்தார். 1,500 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.
நடிகர்கள் சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல், பிரேம் நசீர், விஜய், அஜித் என அத்தனை நடிகர்களுக்கும் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
பத்மா, கோவிந்தம்மாள் என்ற இரு மனைவிகள். இவர்கள் மறைந்து விட்டனர். இவருக்கு மூன்று ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன.