சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய நபருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய நபருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
UPDATED : ஜூன் 04, 2025 03:32 AM
ADDED : ஜூன் 03, 2025 10:21 PM

சென்னை:பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால், எஸ்.ஐ.,யால் தாக்கப்பட்ட நபருக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நகைக்கடை ஊழியர் சர்தார் அலி, தன் இரு நண்பர்களுடன், 2019 நவம்பர் 4ம் தேதி, பொள்ளாச்சி தேங்காய் பாறை ஆற்றை பார்ப்பதற்காக, ஒரே பைக்கில் சென்றுள்ளார்.
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த, கோவை கோட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ., சம்பந்தம், அவர்களின் பைக்கை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனாலும், பைக்கை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இதனால், கோபமடைந்த எஸ்.ஐ., சம்பந்தம், லத்தியால் சர்தார் அலியின் முதுகில் தாக்கியுள்ளார். இதனால், நிலை தடுமாறிய பைக், முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில், கீழே விழுந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.
எஸ்.ஐ., லத்தியால் தாக்கியதால் விபத்து ஏற்பட்டு, தன் கால் உடைந்து நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், சர்தார் அலி மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
சர்தார் அலி, அவரது இரு நண்பர்கள் என மூன்று பேர், விதிகளை மீறி ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். பைக்கை ஓட்டிய நபருக்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை. பைக்கிற்கும் ஆவணங்கள் இல்லை. அதனால் தான் பைக்கை தடுத்து நிறுத்தினோம் என்ற, வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், காவல்துறை சமர்ப்பித்த அறிக்கையில், இதேபோல மற்றொரு வழக்கில் எஸ்.ஐ., சம்பந்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதும், துறை ரீதியான விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பைக்கை நிறுத்தாமல் சென்றால், அதன் பதிவு எண்ணை குறித்து வைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதைவிடுத்து, லத்தியால் தாக்கியது, மனித உரிமைகளை மீறிய செயல். அதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சர்தார் அலி, தன்னால் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே, சர்தார் அலிக்கு ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

