மாநில திட்டக்குழு தயாரித்த 4 வரைவு கொள்கைகள் சமர்ப்பிப்பு
மாநில திட்டக்குழு தயாரித்த 4 வரைவு கொள்கைகள் சமர்ப்பிப்பு
ADDED : டிச 17, 2024 05:36 AM
சென்னை : மாநில திட்டக்குழு தயாரித்த, நான்கு வரைவு கொள்கைகள் மற்றும் ஐந்து ஆய்வு அறிக்கைகள், நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டன.
மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, மாநில திட்டக்குழு தயாரித்த, நான்கு வரைவு கொள்கை ஆவணங்கள் மற்றும் ஐந்து ஆய்வு அறிக்கைகளை முதல்வரிடம் வழங்கினார்.
மாநில திட்டக்குழு துணைத் தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி, தலைமைச் செயலர் முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வரைவு கொள்கை
மாநில திட்டக்குழு, தமிழக நிலையான நில பயன்பாட்டு வரைவு கொள்கை; தமிழக வேலைவாய்ப்பு கொள்கை - 2023; தமிழக மாநில நீர்வள வரைவு கொள்கை; தெரு நாய் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக்கான வரைவு கொள்கை ஆகியவற்றை தயாரித்து வழங்கி உள்ளது.
நகரமயமாதல், காலநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் வைத்து, நீண்டகால நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு, தமிழக நிலையான நில பயன்பாட்டு வரைவு கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
இணக்கமான சூழல்
தொழிலாளர் சந்தையில், பல முக்கியமான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், 'தமிழக வேலைவாய்ப்பு கொள்கை - 2023' மற்றும் மாநில நீர் மேலாண்மையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள, பல்நோக்கு அணுகுமுறையுடன் மாநில நீர்வள வரைவு கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தெரு நாய்களை நிர்வகிப்பதற்கான, முழுமையான அணுகுமுறைகளுடன், 'தெருநாய் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை வரைவு கொள்கை' உருவாக்கப்பட்டு உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே, இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, முதல்வரின் காலை உணவு திட்டத்தால், அரசு துவக்கப்பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம்; புதுமை பெண்கள் திட்டத்தால் கல்லுாரி மாணவியர் மற்றும் குடும்பத்தினர் இடையே ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார தாக்கங்கள்; எண்ணும் எழுத்தும் திட்டத்தை செம்மைப்படுத்துதல்.
தணிக்கும் உத்திகள்
மாநிலத்தில் வெப்ப பகுதிகளை அடையாளம் கண்டு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கும் உத்திகள்; கோடை காலத்தில் வெப்ப தணிப்பு முறைகளை நடைமுறைப்படுத்துதல், தொடர்பான ஆய்வு அறிக்கைகளும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆய்வறிக்கையில், 'காலை உணவு' திட்டத்தால், 90 சதவீத குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதுமைப் பெண் திட்டத்தால், 3 லட்சத்து 28,280 மாணவியர் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மாணவியர் 99.2 சதவீதம் பேர், உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்திருப்பதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

