'மாணவர்களுக்கு மதிய உணவில் தரமற்ற முட்டை விநியோகம்?': அண்ணாமலை
'மாணவர்களுக்கு மதிய உணவில் தரமற்ற முட்டை விநியோகம்?': அண்ணாமலை
ADDED : மே 28, 2026 01:47 AM
சென்னை: ''கடந்த தி.மு.க., ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்ட நிலை, இந்த ஆட்சியிலும் தொடரக் கூடாது,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் வழங்கும் முட்டைகளுக்கு, தலா 5.63 ரூபாய் என நிலையான விலையை நிர்ணயித்து, தமிழக அரசு வழங்குகிறது.
கடந்த மார்ச்சில் முட்டை விலை 3.70 ரூபாயாக குறைந்தபோது, ஒப்பந்ததாரர்கள், 20 கோடி முட்டைகளை வாங்கி, குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளன. அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் வாங்கி சேமித்து வைத்து, ஆண்டு முழுதும் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குளிர்சாதன கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, தொலைதுார கிராமப்புற பள்ளிகளுக்கு எடுத்து செல்லும்போது, முட்டையின் தரம் நிச்சயம் பாதிக்கப்படும்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், மாணவர்களுக்கு மதிய உணவில் பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதை கண்டித்திருக்கிறோம். அதே நிலை, இந்த ஆட்சியிலும் தொடரக்கூடாது. இது, கொள்முதல் சார்ந்த பிரச்னை அல்ல; லட்சக்கணக்கான பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் சார்ந்தது.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, வினியோக நிலை குறித்து, வெளிப்படையான கண்காணிப்பையும், கடுமையான ஆய்வையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியத்தையும் ஏற்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
