ADDED : ஜன 09, 2024 12:38 AM

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 'வில்லேஜ் குக்கிங்' என்ற, 'யு -டியூப் சேனல்' நிர்வாகிகள், தங்கள் வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில், 'பொருளாதார வளர்ச்சிக்கு திறன்களை பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் நடந்த கருத்து பரிமாற்ற நிகழ்வில், 'வில்லேஜ் குக்கிங்' என்ற யு டியூப் சேனலை நடத்தும் பெரிய தம்பி, சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், முத்துமாணிக்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசியதாவது:
நாங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் குக்கிராமத்தை சேர்ந்தவர்கள். 'வில்லேஜ் குக்கிங்' என்ற, யுடியூப் சேனலை 2018ல் ஆரம்பித்தோம்.
இப்போது எங்கள் சேனலை, 2.34 கோடி பேர் பின்பற்றுகின்றனர். உலகம் முழுதும் எங்கள் சேனலுக்கு ரசிகர்கள் உள்ளனர்.
சேனலை துவங்குவதற்கு முன்பே, இப்படித்தான் செயல்பட வேண்டும் என, விதிமுறைகளை வகுத்தோம். பெரிய வெற்றி கிடைத்தும், இன்று வரை அதை பின்பற்றி வருகிறோம்.
சமையல் மட்டுமல்லாது, பசுமை மற்றும் நகைச்சுவையுடன் விதவிதமாக வீடியோக்கள் வெளியிடுகிறோம். இதற்காகவே, வில்லேஜ் குக்கிங் சேனலை பார்க்கின்றனர்.
நாங்கள் வேறு யாருக்கும், எந்தப் பொருளுக்கும் விளம்பரம் செய்வதில்லை. பல லட்சம் தருவதாக சொன்ன நிறுவனத்தின் விளம்பரத்தையும் தவிர்த்து விட்டோம்.
இப்படி உறுதியாக இருப்பதும், மக்களின் ரசனைக்கேற்ப வீடியோக்களை வெளியிடுவதும், எங்கள் வெற்றிக்கு காரணம். புதிய புதிய சிந்தனைகளை தொழிலில் புகுத்துவதும், கடும் உழைப்பும் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். அதற்கு நாங்களே உதாரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.