அளவுக்கு அதிகமாக வாங்கி பதுக்குவதால் உரத்திற்கு வரலாம் திடீர் தட்டுப்பாடு
அளவுக்கு அதிகமாக வாங்கி பதுக்குவதால் உரத்திற்கு வரலாம் திடீர் தட்டுப்பாடு
ADDED : ஜூலை 02, 2025 10:28 PM
சென்னை:உரங்களை விவசாயிகள் அதிகளவில் வாங்கி பதுக்குவதால், சாகுபடி நேரத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி காலம் துவங்கியுள்ளது. பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி, ஐந்து லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற மாவட்டங்களில் நெல் மட்டுமின்றி, கரும்பு, பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி, 25 லட்சம் ஏக்கரில் துவங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு, 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில், 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நடவு மானியமாக ஏக்கருக்கு, 4,000 ரூபாயும், விதை நெல்லும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால், சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரியா உள்ளிட்ட உரங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிற்கு யூரியா அனுப்ப, சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல், விவசாயிகள் மத்தியில் பரவி வருகிறது. இதை கேட்டு விவசாயிகள் பலரும் மூட்டை கணக்கில் யூரியா, பொட்டாஷ், கூட்டு உரங்கள், டி.ஏ.பி., ஆகியவற்றை வாங்கி பதுக்கி வருகின்றனர். இதனால், சாகுபடி நேரத்தில் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநிலத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகள் என, 12,258 இடங்களில் உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது யூரியா, 1.21 லட்சம் டன்; டி.ஏ.பி., 35,900; பொட்டாஷ் 46,800; கூட்டு உரம் 1.60 லட்சம் டன் கையிருப்பு உள்ளன.
தேவையான உரங்கள் வழங்க, மத்திய உரத்துறை உறுதியளித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவுவதால், விவசாயிகள் பலரும் சாகுபடி துவங்கும் முன்பே, உரங்களை வாங்கி குவிக்க துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.