தடுக்கி விழுந்தார் துரைமுருகன் சட்டசபையில் திடீர் பரபரப்பு
தடுக்கி விழுந்தார் துரைமுருகன் சட்டசபையில் திடீர் பரபரப்பு
ADDED : ஏப் 27, 2025 01:31 AM
சென்னை: சட்டசபையில் நேற்று அமைச்சர் துரைமுருகன், திடீரென கால் இடறி கீழே விழுந்தார்.
சட்டசபையில் கேள்வி நேர விவாதம் நடந்த போது, காங்கிரஸ் - தாரகை கத்பர்ட், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் துறை தொடர்பாக கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தார்.
முன்வரிசையில் அமர்ந்திருந்த சட்டசபை கட்சி தலைவர் ஒருவர், அமைச்சர் துரைமுருகனிடம் சைகையில் ஏதோ சொன்னார்.
அதற்கு துரைமுருகன், சபைக்கு வெளியே வாங்க பேசலாம் என்ற ரீதியில், முகஜாடை காட்டினார். அத்துடன், தன் இருக்கையில் இருந்து எழுந்து, சபைக்கு வெளியே செல்ல முயன்றார் துரைமுருகன்.
சபாநாயகர் அப்பாவு இருக்கைக்கு அருகே வந்தபோது, கால் இடறி துரைமுருகன் கீழே விழுந்தார்; எழுந்திருக்க முடியாமல் அப்படியே கிடந்தார்.
சபை அதிகாரிகள் ஓடி வந்து, துரைமுருகனை துாக்கி நிற்க வைத்தனர். பின்னர், அமைச்சர் வேலு, அவரை கைதாங்கலாக அழைத்து வந்து, இருக்கையில் அமர வைத்தார்.
சட்டசபை நிகழ்ச்சிகளை தொடரும்படி, சபாநாயகரை பார்த்து, அமைச்சர் வேலு கையசைத்தார்.
இதைதொடர்ந்து, பதிலை தொடரும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சபாநாயகர் கூறினார். இதனால், சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரம், சபை வளாகத்தில் உள்ள அறையில், மானிய கோரிக்கை தாக்கல் செய்யும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன், முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார். தகவலை கேள்விப்பட்டவுடன் சபைக்கு விரைந்து வந்து, துரைமுருகனிடம் கேட்டறிந்தார்.