ADDED : செப் 07, 2011 11:38 PM
ஈரோடு: மின் கோபுரத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்ற வடமாநில தொழிலாளியை மீட்ட போலீசார், அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேந்தவர் மோகன்லால், 45. இரண்டு வாரங்களுக்கு முன், நான்கு நண்பர்களுடன் வேலை தேடி, ஈரோடு வந்தார். நண்பர்கள் இவரை தவிக்க விட்டு, எங்கோ சென்றதால், மொழி தெரியாமல் கடந்த சில நாட்களாக, ஈரோட்டிலேயே மோகன்லால் வலம் வந்தார். மனக்குழப்பத்துக்கு ஆளான அவர், நேற்று காலை, சூரம்பட்டி நான்கு ரோடு அருகேயுள்ள, 50 அடி உயரமுள்ள மின்கோபுரத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக, போலீசார் கூறியதை அடுத்து, கீழே இறங்கி வந்தார். மோகன்லாலுக்கு வேண்டிய உதவியை செய்து, மகாராஷ்டிர மாநிலத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

