தற்கொலை மிகப்பெரிய பொது சுகாதார பிரச்னையாக உள்ளது: ராம்நாத் கோவிந்த்
தற்கொலை மிகப்பெரிய பொது சுகாதார பிரச்னையாக உள்ளது: ராம்நாத் கோவிந்த்
ADDED : பிப் 27, 2026 06:51 AM

சென்னை: ''நாட்டில், தற்கொலை என்பது இன்றளவும் மிகப்பெரிய பொது சுகாதார பிரச்னையாக உள்ளது,'' என, இந்திய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
'சினேகா' அறக்கட்டளை, தற்கொலை தடுப்பு பணிகளில், 40 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, 'தற்கொலை தடுப்பு, மனநல விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு' குறித்த சர்வதேச மூன்று நாள் மாநாடு, சென்னை, தி.நகரில் நேற்று துவங்கியது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
தற்கொலைத் தடுப்பு என்பது மனநல மருத்துவர்களின் பொறுப்பு மட்டும் அல்ல;முழு சமூகத்தின் பொறுப்பு.
'உங்களை கண்டுபிடிக்கச் சிறந்த வழி, பிறருக்கான சேவையில் உங்களை இழப்பதே' என்றார் காந்தியடிகள். சினேகா அறக்கட்டளையின் பயணம், இதையே பிரதிபலிக்கிறது. சேவை என்பது தர்மம் மட்டுமல்ல; அது ஒற்றுமை.
இந்தியாவில், தற்கொலை என்பது, இன்றளவும் மிகப்பெரிய பொது சுகாதார பிரச்னையாக உள்ளது. கல்வி அழுத்தம், தேர்வு, மன அழுத்தம் காரணமாக, மாணவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது.
கடந்த 2013 முதல் 2023 வரை மாணவர் தற்கொலைகள் 65 சதவீதம் அதிகரித்துள்ளது; 2023ல் மட்டும் 13,892 வழக்குகள் பதிவாகியுள்ளன.
வாழ்க்கை குறித்த அச்சங்களும், எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையின் காரணமாகவும், பல இளம் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. தொழில்முறை நபர்களும் கடுமையான போட்டி, சோர்வு மற்றும் இடையறாத அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் தற்கொலை அதிகமாக இருந்தது. அரசு மற்றும் சமூகம் இணைந்து, நடவடிக்கைகள் எடுத்ததன் வாயிலாக மாற்றம் ஏற்பட்டது. இதனால், ஒன்றிணைந்து செயல்பட்டால் கடினமான சவால்களையும் கடக்க முடியும்.
மனநலம் குறித்த திறந்த உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகள் ஆலோசனை சேவைகளை வழங்க வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைகளை வழங்க பயிற்சி பெற வேண்டும். ஒரு உயிரைக் காப்பாற்ற அசாதாரண சக்தி தேவையில்லை; மனிதநேய உணர்வே போதும்.வலுவான இந்தியாவை நாம் கட்டியெழுப்ப முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் ராமசுப்பிரமணியன் பேசியதாவது:
உலகின் அனைத்து சமூகங்களும், மதங்களும், தற்கொலையை பாவமாகக் கண்டித்துள்ள போதிலும், தற்கொலைகள் தொடர்கின்றன. மனநல சிகிச்சை மற்றும் மனநல விழிப்புணர்வு துறையில், அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த சர்வதேச மாநாட்டின் நோக்கம், மனநல பராமரிப்பை மேம்படுத்த ஒரு தெளிவான வழி காட்டுதலை உருவாக்கும் சிறந்த நிபுணர்களை, ஒரே மேடையில் கொண்டு வருவது.
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு துறையில், சினேகா அமைப்பு உள்ளிட்ட அனைவரின் வழிகாட்டுதலுடன், தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனம் செலுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
