ADDED : பிப் 29, 2024 11:05 PM
சென்னை:இந்த ஆண்டு கோடைக் காலம், நாடு முழுதும் இன்று துவங்குகிறது. ஜூன் முதல் வாரம் வரை, கோடை வெயிலின் வெப்ப தாக்கம் நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நம் நாட்டில், கோடை காலம், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலம், குளிர் காலம் என, நான்கு வகை பருவகாலங்கள் நிலவுகின்றன.
மார்ச் முதல்
இதில், தென் மேற்கு பருவமழை, நாடு முழுதும் நீராதாரங்களை நிரப்பும் முக்கிய பருவமழையாக விளங்குகிறது.
இந்த பருவமழையில் சேகரிக்கப்படும் நீரால் மட்டுமே, தெற்கில் கன்னியாகுமரி முதல் வடக்கில் பஞ்சாப் வரை, விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
தென் மேற்கு பருவமழை, ஜூன் முதல் அக்டோபர் வரையில் நீடிக்கும். பின், வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி வாரம் முதல் ஜனவரி 2ம் வாரம் வரை நிலவும்.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளுக்கு, முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.
இதையடுத்து, பிப்ரவரி வரையிலும் குளிர்காலம் நிலவும். இதில், காஷ்மீர், பஞ்சாப், டில்லி, ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், பனியின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
இதையடுத்து மார்ச் முதல் ஜூன் முதல் வாரம் வரை, கோடை காலம் நிலவும். இந்த ஆண்டுக்கான கோடை காலம் இன்று துவங்குகிறது.
இந்த காலத்தில், தமிழகத்தில், 104 டிகிரி செல்ஷியஸ் அதிகபட்ச வெயில் பதிவாகும் வாய்ப்புஉள்ளது.
'லா நினா'
நாட்டின், மத்திய மற்றும் வட மாநிலங்களிலும், ஆந்திராவிலும், 110 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.
இந்த ஆண்டு வெயில் காலம் எப்படி இருக்கும்; முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டால், இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரிக்குமா, குறையுமா; பசிபிக் மற்றும் சீன கடற்பகுதிகளிலும், இந்திய பெருங்கடலிலும், 'லா நினா' என்ற அதி வெப்ப சூழல் நிலவுமா என்பது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று, விரிவான அறிக்கை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

