பொருட்காட்சி நடத்த லஞ்சம்; அதிகாரிகளுக்கு 'சம்மன்'
பொருட்காட்சி நடத்த லஞ்சம்; அதிகாரிகளுக்கு 'சம்மன்'
ADDED : பிப் 18, 2024 06:28 AM

சென்னை:: பொருட்காட்சிகள் நடத்த அனுமதி வழங்க, லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், மேலும் சில அதிகாரிகளுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை என்ற கட்டடத்தின், 10வது மாடியில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பொருட்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கும் பிரிவும் செயல்படுகிறது.
இதில், உயர் நிலை கணக்கராக இருந்த அன்பரசு, அலுவலக உதவியாளர் பாலாஜி ஆகியோர், பொருட்காட்சி நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாக, 2023 செப்டம்பரில் மதுரையைச் சேர்ந்த மாணிக்கவாசம் என்பவரிடம், 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
அவற்றை ஆய்வு செய்து, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த மேலும் சில அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.