ADDED : செப் 18, 2024 11:57 PM

சென்னை:தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட எட்டு நகரங்களில், வெயில், 100 டிகிரி பாரன்ஹீட்; அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
தென்மேற்கு பருவகாற்று திசை மாறியதால், தமிழகத்தில் வெயில் வாட்டி எடுப்பது தொடர்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வறண்ட வானிலை காணப்பட்டது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒருசில இடங்களில், இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலை, செப்., 24 வரை தொடரக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில், இன்று பகல் நேரத்தில் இயல்பைவிட, 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும். இதனால், வெளியில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவுக்கு மேகமூட்டமாக காணப்படும். பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, 39 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கக்கூடும்.
நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில், 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக மதுரையில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
அதிராம்பட்டினம், ஈரோடு, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, தஞ்சை, திருச்சி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.