அதிமேதாவித்தன அரசியல்; இபிஎஸ் பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
அதிமேதாவித்தன அரசியல்; இபிஎஸ் பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
ADDED : நவ 24, 2025 12:52 PM

சென்னை: இபிஎஸ் அதிமேதாவித்தன அரசியல் செய்தார். அவர் பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, 'சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?' என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார். பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்.
நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என இபிஎஸ் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழகத்துக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும்.
சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று இபிஎஸ் நினைக்கிறாரா? மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்த இபிஎஸ், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழக ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

