அஞ்சாமல் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கணேசன் கைது
அஞ்சாமல் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கணேசன் கைது
ADDED : அக் 18, 2024 05:08 PM

கடலுார்:இலவச கட்டாய கல்வி திட்ட தொகை விடுவிக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கடலுார் முதுநகரை சேர்ந்தவர் பாலசண்முகம்; அதே பகுதியில் தனியார் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி நடத்தி வருகிறார். இவர், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணம் 14 லட்சத்து 57 ஆயிரத்து 56 ரூபாயை விடுவிக்கக்கோரி, கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கணேசன், 50; என்பவரை அணுகினார். அதற்கு, கண்காணிப்பாளர் கணேசன், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் பாலசண்முகம், புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி, பாலசண்முகம் ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக் கொண்டு நேற்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பாலசண்முகத்திடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கிய கணேசனை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கணேசனிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.