ஞானசேகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு? மா.சு.,வை புறக்கணிக்கும் முதல்வர் குடும்பம்
ஞானசேகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு? மா.சு.,வை புறக்கணிக்கும் முதல்வர் குடும்பம்
ADDED : ஜன 10, 2025 08:31 PM
முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் மா.சுப்பிரமணியன். சென்னையில் முதல்வர் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவருக்கு அழைப்பு இருக்கும். 'வாக்கிங்' போகும்போதும் கூடவே அழைத்துச் செல்லும் அளவுக்கு, தன்னுடைய மிக நெருக்கமான வட்டத்தில் அவரை வைத்திருந்தார் முதல்வர்.
கடந்த 9ல், சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குள் அமைந்திருக்கும் சின்னமலை பகுதியில், ஒரு ரேஷன் கடையில், இந்தாண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை, முதல்வர் துவக்கி வைக்கும் நிகழ்வு நடந்தது. சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான மா.சுப்பிரமணியத்திற்கு அழைப்பு இல்லை.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பிரச்னையில், குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆதரவாக, மா.சு., செயல்பட்டதாக கிளம்பியிருக்கும் புகாரை அடுத்தே, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல், அவரை புறக்கணிப்பதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.
அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
சைதை பகுதியின் வட்டப் பொறுப்பில் இருந்த ஞானசேகரன் தான், அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பதை, கோட்டூர்புரம் போலீசார் கண்டறிந்து, சைதை பகுதி தி.மு.க., பொறுப்பாளர்களுக்கு கூறியுள்ளனர்.
அதையடுத்து, ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விட்டதே, தி.மு.க.,வைச் சேர்ந்தோர் தான். லேசான விசாரணைக்கு பின், ஞானசேகரனை விடுவிக்க வேண்டும் என்று, தி.மு.க., பொறுப்பாளர்கள் நெருக்கடி கொடுக்க, போலீசார் அன்றைய தினம் ஞானசேகரனை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இதற்கிடையில், இந்த விவகாரம் பூதாகரமாக வெளியில் செய்தியாக பரவ, அரசுக்கும் போலீசுக்கும் நெருக்கடியானது. அதையடுத்து, மறு நாள் காலை மீண்டும் ஞானசேகரனை அழைத்து வந்து விசாரணையை தொடர்ந்தனர்.
அதற்குள் ஞானசேகரனும், கட்சியினரும் மாவட்ட செயலரான மா.சுப்பிரமணியனுக்கு தொடர்ந்து போன் மேல் போன் போட்டு பேசியுள்ளனர். இதையடுத்து, அமைச்சர் பெயரைச் சொல்லி, சைதை பகுதி தி.மு.க.,வினர் பலரும், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசி உள்ளனர். இருந்தபோதும், பிரச்னை பூதாகரமாகி விட்டதால் ஏற்பட்ட கடும் நெருக்கடியைத் தொடர்ந்து, ஞானசேகரனை கைது செய்ததாக, போலீசார் அறிவித்தனர்.
இதற்கிடையில், இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றது. நீதிபதிகள், சென்னை மாநகர போலீஸ் விசாரணையை தொடர தடை போட்டனர். மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழு நியமித்து, விசாரணையை தொடர உத்தரவிட்டனர். இது போலீசுக்கும் அரசுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் விசாரணையை துவங்க, இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, உளவுத் துறை அறிக்கையை கேட்டு வாங்கினார் முதல்வர் ஸ்டாலின். அதில், இந்த விஷயத்தில் ஞானசேகரனை காப்பாற்ற, தி.மு.க.,வினர் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் விவரித்துள்ளனர்.
ஞானசேகரனுக்கு அமைச்சர் மா.சு., ஆதரவாக இருந்தார் என்பது போன்ற விபரங்களும் இருந்து உள்ளன. இதையடுத்தே, அமைச்சர் மா.சு., மீது முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் கோபம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த சூழலில் தான், ஏற்கனவே திட்டமிட்டபடி, சென்னை சின்னமலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அன்றைய தினம் காலையிலேயே முதல்வர் வீட்டுக்கு அமைச்சர் மா.சு., சென்றுள்ளார். முதல்வரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தபோது, 'சைதாப்பேட்டைக்கு எனக்கு வழி தெரியும்; நான் விழாவுக்கு செல்வேன். நீங்க சட்டசபைக்குச் சென்று, அங்கு பணிகளை பாருங்க' என கோபமாக கூறி, மா.சு.,வை அனுப்பி விட்டார் முதல்வர்.
பின், அமைச்சர் மா.சு., இல்லாமலேயே, அவர் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியை முடித்து திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.
மா.சு., எழுதியுள்ள, 'கின்னஸ் கலைஞர்' என்ற நுால் வெளியீட்டு நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன் நடந்தது. அந்த நுாலை, துணை முதல்வர் உதயநிதிக்கு கொடுக்க, அவருடைய வீட்டுக்கு மா.சு., போயிருந்தார். நுாலை பெற்றுக் கொள்ளாாமல், மா.சு.,வை திருப்பி அனுப்பி விட்டார் உதயநிதி.
ஞானசேகரன் விவகாரத்தில், மா.சு., மீது முதல்வர் குடும்பமே கோபத்தில் இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என தெரியவில்லை.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

