வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு எதிராக தி.மு.க., மனு தேர்தல் கமிஷன் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு எதிராக தி.மு.க., மனு தேர்தல் கமிஷன் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : நவ 12, 2025 01:55 AM
எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிராக, தி.மு.க., - திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்கும்படி தலைமை தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தலைமை தேர்தல் கமிஷன் துவக்கிஉள்ளது.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க., சார்பில், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அத்துடன், தமிழக காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ம.தி.மு.க., சார்பில் வைகோ, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் மற்றும் ஜாய் மால்யா பாக்ஷி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் முன்வைத்த வாதம்:
தமிழகத்தின் பல இடங்களில், இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. நிறைய இடங்களில் திருவிழாக்கள் நடக்கின்றன. இப்படி ஏராளமான இடர்பாடுகள் இருக்கும் போது, குறைவான நேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொள்வது சரியாக இருக்காது.
மேலும், தமிழகத்தை பொறுத்தவரை படிப்புக்காகவும், வேலைக்காகவும் பலர் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் எப்படி இந்த குறுகிய காலத்திற்குள் ஆவணங்களை தர முடியும். கடந்த காலங்களிலும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நடந்துள்ளது.
அதற்கு மூன்று ஆண்டுகள் வரையாகும். ஆனால், தற்போது ஒரு மாத அவகாசம் மட்டுமே கொடுக்கின்றனர். பீஹாருக்கு ஒரு விதமாகவும், பிற மாநிலங்களுக்கு வேறு விதமாகவும் நடைமுறைகளை தேர்தல் கமிஷன் மாற்றி உள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் தேர்தல் கமிஷன் பதில் அளிக்க தான் போகிறது. அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? தேர்தல் கமிஷனுக்கும் இதில் வாய்ப்பு கொடுப்போம்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிரான மனுக்களுக்கு, தேர்தல் கமிஷன் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என, நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.
இந்த வழக்கு விசாரணை வரும், 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்தல் கமிஷனின் பதிலுக்கு, எதிர் தரப்பினர், 24ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-டில்லி சிறப்பு நிருபர்-:

