தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : டிச 06, 2025 01:58 AM
: 'திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, வழக்கமான முறையில் பட்டியலிடப்படும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதுரை, திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் தமிழக அரசு சார்பில் நேற்று வாய்மொழியாக வலியுறுத்தப்பட்டது.
அதற்கு, ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்திருந்த எதிர்மனுதாரரான ராம ரவிகுமார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''வாய்மொழியான கோரிக்கைகளை ஏற்க முடியாது. தமிழக அரசு சரியான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தால் வழக்கமான நடைமுறைப்படி இந்த மனு விசாரணைக்காக பட்டியலிடப்படும்,'' என்றார்.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, வரும் 8ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டில்லி சிறப்பு நிருபர் -

