சட்டவிரோத கட்டுமானங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம்: அதிகாரிகளுக்கு கண்டிப்பு; வழிமுறைகள் அறிவிப்பு
சட்டவிரோத கட்டுமானங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம்: அதிகாரிகளுக்கு கண்டிப்பு; வழிமுறைகள் அறிவிப்பு
ADDED : ஜன 01, 2025 04:43 AM

சென்னை : விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்வது, அனுமதி பெறாமல் கட்டடம் கட்டுவது போன்ற பிரச்னைகளுக்கு முடிவு காணவும், இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாவதை குறைக்கவும், உச்ச நீதிமன்றம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்த வழிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநகராட்சிகளை அறிவுறுத்தும்படி, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
உ.பி., மாநிலம் மீரட்டின் சாஸ்திரி நகரில், வீர்சிங் என்பவருக்கு 1986ல் வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இந்த மனையை குடியிருப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை, வீட்டுவசதி வாரியம் விதித்திருந்தது.
ஆனால், எந்த அனுமதியும் பெறாமல், வணிக ரீதியான கட்டுமானத்தை வீர்சிங் மேற்கொண்டார். கடைகளை கட்டி விற்று விட்டார். வாரியம் நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, சட்டவிரோதமாக கட்டிய கட்டுமானங்களை இடிக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை, வீட்டுவசதி வாரியத்தால் அமல்படுத்த முடியவில்லை. கட்டடத்தை இடிக்க, போலீஸ் தரப்பிலும் ஒத்துழைப்பு இல்லாததால், மாநில உயர் நீதிமன்றத்தை வாரியம் அணுகியது.
கட்டடத்தை இடிக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வீர்சிங்கிடம் கடையை வாங்கியவர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்தது. தீர்ப்பை நீதிபதி ஆர்.மகாதேவன் எழுதி உள்ளார்.
மீறப்படவில்லை
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 24 ஆண்டுகளாக கட்டடம் இருப்பதால், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சட்டப்படி எந்த உரிமையும் வந்து விடாது. இவ்வழக்கில், இயற்கை நீதி மீறப்படவில்லை.
மனை ஒதுக்கப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பிய பின், அனுமதியின்றி கட்டிய கட்டுமானத்தை அகற்ற, வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டம், விதிகளுக்கு முரணாக எந்த கட்டுமானங்கள் மேற்கொண்டாலும், அதை சட்டவிரோதமானது என்று தான் கருத முடியும்; அதை இடிக்கவும் வேண்டும்.
காலம் கடந்து விட்டது; அதிகாரிகளின் நடவடிக்கையின்மை; கணிசமான பணம் கட்டுமானத்துக்கு செலவிடப்பட்டுள்ளது என்ற காரணங்களுக்காக, சட்டவிரோத கட்டுமானங்களை பாதுகாக்க முடியாது. எனவே, திட்ட அனுமதியை மீறியோ அல்லது திட்ட அனுமதி பெறாமலோ மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை ஊக்குவிக்க முடியாது.
ஒவ்வொரு கட்டுமானமும், விதிகளை கண்டிப்புடன் பின்பற்றியே கட்டப்பட வேண்டும். விதிமீறல் இருப்பது, நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தால், இரும்புக்கரத்தால் அடக்க வேண்டும்; எந்த கருணையும் காட்ட முடியாது.
அனுமதியில்லாத கட்டுமானங்களால், அதில் இருப்பவர்களுக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவில்லை என்றாலோ, சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்களை பொறுப்பாக்கவில்லை என்றாலோ, இதுபோன்ற விதிமீறல்கள் தடுக்கப்படாமல் போய்விடும்; பெருகி விடும்.
தடம் புரளும்
அதிகாரிகளை தப்ப விட்டால், அவர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தொடர்ந்து கண்டும் காணாமல் இருப்பர். அதனால், திட்டங்கள் தடம் புரளும்; மாசு, போக்குவரத்து பிரச்னை, பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, பொது நலன் கருதி, கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறோம்:
l கட்டடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கும் போது, 'பில்டர்' அல்லது விண்ணப்பம் செய்பவரிடம் இருந்து உத்தரவாதம் பெறப்பட வேண்டும். உரிய அதிகாரிகளிடம் இருந்து, கட்டுமான பணி நிறைவு சான்றிதழ் அல்லது குடியேறுவதற்கான சான்றிதழ் பெற்ற பின்னரே, பயனாளிகளிடம் அல்லது உரிமையாளர்களிடம் கட்டடம் ஒப்படைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும்
l பில்டர் அல்லது உரிமையாளர் அல்லது டெவலப்பர், கட்டுமானம் மேற்கொள்ளப்படும் இடத்தில், திட்ட அனுமதியின் நகலை, பலரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவ்வப்போது இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான ஆவணத்தையும், அவர் பராமரிக்க வேண்டும்
l தனிப்பட்ட ஆய்வுக்கு பின், திட்ட அனுமதியின்படி தான் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது; எந்த விதிமீறலும் இல்லை என்பதில் திருப்தி அடையும் பட்சத்தில், கட்டட பணி நிறைவு சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரி வழங்க வேண்டும். அனுமதியில் இருந்து விலகல் ஏதும் இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விலகலை சரிசெய்யும் வரை, சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்
l கட்டட பணி நிறைவு சான்றிதழ் சமர்ப்பித்த பின்னே, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு வசதிகளை வழங்க வேண்டும். கட்டட பணி நிறைவு சான்றிதழ் வழங்கிய பின், திட்ட அனுமதிக்கு முரணாக, விதிமீறல் ஏதும் தெரிய வந்தால், உடனடியாக, அந்த பில்டர் அல்லது உரிமையாளருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ் வழங்குவதற்கு காரணமான அதிகாரிக்கு எதிராக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
l குடியிருப்பாக இருந்தாலும், வணிக கட்டடமாக இருந்தாலும், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தில், வணிகம் செய்ய உரிமம் வழங்கக்கூடாது
l சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மற்றொரு துறையின் ஒத்துழைப்பை உள்ளாட்சி அமைப்பு கோரினால், உடனடியாக உதவி செய்ய வேண்டும். தாமதம் செய்தாலோ, கடமை தவறினாலோ, அதை கடுமையாக கருத வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக, மாநில அரசுகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
l கட்டட பணி நிறைவு சான்றிதழ் தராததை எதிர்த்தோ, கட்டட வரன்முறை கோரியோ, பில்டர் அல்லது உரிமையாளர்கள் முறையீடு செய்தால், 90 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்
l கட்டட பணி நிறைவு சான்றிதழை சரிபார்த்த பின்னே, அந்த கட்டடத்துக்கான கடன் தொகைக்கு, வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்
l இந்த உத்தரவுகள் எதையும் மீறினால், சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதோடு, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும்
l உத்தரவுகளை அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்றினால், வீடுகள், கட்டடங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் வழக்குகள் தொடர்வது கணிசமான எண்ணிக்கையில் குறையும். அதனால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இதுதொடர்பாக உரிய உத்தரவுகளை சுற்றறிக்கை வாயிலாக பிறப்பிக்க வேண்டும். உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்றவும், தவறினால் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மூன்று மாதங்களுக்குள் இடத்தை காலி செய்து ஒப்படைக்கவும், அதன்பின், சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.