முடிவு எடுக்க காலக்கெடு: ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி குறித்து ஜூலை 22ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை
முடிவு எடுக்க காலக்கெடு: ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி குறித்து ஜூலை 22ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை
UPDATED : ஜூலை 20, 2025 08:30 PM
ADDED : ஜூலை 19, 2025 06:49 PM

புதுடில்லி: மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதா வேண்டாமா என்று முடிவு எடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா என்பன உள்ளிட்ட 14 கேள்விகள் தொடர்பாக வரும் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.
தமிழக சட்டசபையில் தி.மு.க., அரசு நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் தராமலும், திருப்பி அனுப்பாமலும் வைத்திருந்தார். வேண்டுமென்றே கவர்னர் இழுத்தடிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கடந்த ஏப்., 08 ம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மகாதேவன் அமர்வு, மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் நீதிபதிகள் காலக்கெடு விதித்தனர். இந்தத் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அரசியல் அதிர்வை உண்டாக்கியது.
இதனை தொடர்ந்து அரசியல்சாசனத்தின் 143(1) பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தை ஜனாதிபதி கோர்ட்டிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளார். இதன்படி, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது தொடர்பாக 14 கேள்விகளை திரவுபதி முர்மு கேட்டுள்ளார்.
ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்
1) ஒரு மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின் கீழ் அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?
2) அந்த வாய்ப்புகளை பயன்படுத்த, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?
3) இந்த பிரிவின்கீழ், கவர்னருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா?
5) அரசியல் சாசனம் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்காத நிலையில் கோர்ட் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
6) 201வது பிரிவின்படி, மசோதா மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு உள்ள தனி உரிமைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
7) அரசியல் சாசனத்தில் ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட் அவ்வாறு நிர்ணயிக்க முடியுமா?
8) கவர்னர் ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்போது, தனக்குள்ள அதிகாரம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி ஆலோசனை பெற வேண்டுமா?
9) பிரிவு 200ன் கீழ் கவர்னரும், 201ன் கீழ் ஜனாதிபதியும் முடிவு எடுப்பதற்கு முன்பாக, மசோதா சட்டமாகுமா? சட்டமாகாத மசோதாவில் உள்ளது பற்றி கோர்ட் விசாரிக்க முடியுமா?
10) கவர்னர் அல்லது ஜனாதிபதி வழங்க வேண்டிய உத்தரவுகளை, 142வது பிரிவின்கீழ் வேறு வகையில் கோர்ட் பிறப்பிக்க முடியுமா?
11) சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, கவர்னர் ஒப்புதல் தராமலேயே சட்டமாக அமல்படுத்த முடியுமா?
12) ஒரு வழக்கில்,அரசியலமைப்பு சட்டம் தொடர்பான கேள்வி எழும்போது, அச்சட்டத்தின் 145 (3) பிரிவின்படி, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது கட்டாயமா?
13) பிரிவு 142ன் படி, அமலில் உள்ள சட்ட நடைமுறைகளுக்கு எதிராக, முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்க வழி இருக்கிறதா?
14) மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான விவகாரத்தில், 131வது பிரிவின்படி சிறப்பு வழக்கு தொடுப்பதை தவிர, சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்பை எந்த வகையிலாவது அரசியல் சாசனம் தடுக்கிறதா? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், குடியரசு கேட்ட விளக்கம் குறித்த வரும் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட், விசாரணைக்கு எடுக்கிறது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பிஎஸ் நரஷிம்மா மற்றும் ஏஎஸ் சந்துர்கர் அமர்வு இதனை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.