கோவில் நிலத்தில் வணிக வளாகம் கட்ட தடை; உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
கோவில் நிலத்தில் வணிக வளாகம் கட்ட தடை; உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
UPDATED : மே 27, 2025 06:11 AM
ADDED : மே 27, 2025 12:43 AM

கோவில் உபரி நிதியில், வணிக வளாகம் கட்ட சட்ட ரீதியாக அனுமதியில்லை என்ற, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஹிந்து சமய அறநிலையத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள நந்திவரத்தில், நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு எதிரே, 16 ஏக்கர் நிலம் உள்ளது.
கோவிலுக்குச் சொந்தமாக உள்ள இந்த நிலத்தில், 1.12 கோடி ரூபாய் மதிப்பில், 10 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்ட, 2023 டிச.,11ல், 'டெண்டர்' கோரப்பட்டது. 'ஹிந்து சமய அறநிலையத்துறையின் இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்' எனக் கோரி, பக்தரான பாஸ்கர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கோவில் உபரி நிதியில் இதுபோல வணிக வளாகம் கட்ட, சட்ட விதிகள் அனுமதிக்கவில்லை. மாறாக, உபரி நிதியை வங்கியில், 'டிபாசிட்' செய்து வருவாய் ஈட்டலாம்.
'கட்டப்பட்ட கட்டுமானத்தை, அன்னதான கூடத்துக்கு பயன்படுத்த வேண்டும். டெண்டர் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது' என்று, இந்தாண்டு ஜன., 9ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை மேல் முறையீடு செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் விக்ரம் நாக், சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, ஹிந்து சமய அறநிலையத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- நமது நிருபர் -

