சுசி ஈமு நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை ரூ.19 கோடி மோசடி வழக்கில் தீர்ப்பு
சுசி ஈமு நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை ரூ.19 கோடி மோசடி வழக்கில் தீர்ப்பு
ADDED : ஜன 30, 2025 06:37 AM

கோவை,: ஈமு நிதி நிறுவனம், 19 கோடி ரூபாய் மோசடி வழக்கில், அந்நிறுவன அதிபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கேவை மாவட்டம், பொள்ளாச்சி, டி.கொட்டம்பட்டியில், சுசி ஈமு பார்ம் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், 1.5 லட்சம் முதலீடு செய்தால், ஆறு ஈமு கோழி குஞ்சு வழங்கி , அதற்கு செட் அமைத்து தருவதாகவும், பராமரிப்பு செலவுக்கு மாதம், 6,000 ரூபாய், ஆண்டுக்கு, 20,000 போனஸ் தருவதாகவும், இரண்டு ஆண்டுக்கு பிறகு டெபாசிட் தொகை முழுவதையும் திருப்பி தருவதாகவும் விளம்பரப்படுத்தினர்.
இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் டெபாசிட் செய்தனர்.ஆனால், முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பி வழங்கவில்லை. புகாரின் பேரில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், 1,087 பேரிடம், 19.02 கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம்,பெருந்துறையை சேர்ந்த குருசாமி,45, மற்றும் அருண்குமார், மித்ரா தேவி ஆகியோர் மீது, 2012, ஆக., 10ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மீது, கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில்(டான்பிட் கோர்ட்) வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 13 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
இவ்வழக்கில் விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்ட குருசாமிக்கு, 10 ஆண்டு சிறை, மொத்தம், 19 கோடி ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மற்ற இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
அபராத தொகையை, பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு பிரித்து கொடுக்க உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில், சிறப்பு வக்கீல் கண்ணன் ஆஜரானார்.

