'சஸ்பெண்ட்' டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு நெஞ்சு வலி மருத்துவமனையில் அனுமதி
'சஸ்பெண்ட்' டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு நெஞ்சு வலி மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஜூலை 24, 2025 12:59 AM

சென்னை:'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, டி.எஸ்.பி., சுந்தரேசன், திடீர் நெஞ்சு வலி காரணமாக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்தவர் சுந்தரேசன், 52. சட்ட விரோத மது பாட்டில்கள் கடத்தல் மற்றும் மது விற்பனையை தடுக்கும் பணியில், தீவிரம் காட்டி வந்தார்.
இது தொடர்பாக, 1,200 வழக்குகள் பதிந்து, 700க்கும் மேற்பட்டோரை கைது செய்து, சிறையில் அடைத்தார். இதனால், மயிலாடுதுறை காவல் துறை உயரதிகாரிகளுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், சுந்தரேசனுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது பற்றி, சில தினங்களுக்கு முன், சுந்தரேசன் பேட்டி அளித்தார். இதனால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சுந்தரேசனின் தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. அவரை பார்க்க, ஏற்கனவே பல முறை சுந்தரேசன் விடுமுறை கேட்டுள்ளார்; உயர் அதிகாரிகள் தரவில்லை.
இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின், தந்தையை காண சுந்தரேசன் சென்னை வந்தார். அப்போது, அவருக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவலர் மாற்றம் டி.எஸ்.பி., சுந்தரே சனுக்கு ஆதரவாக, சென்னை கிண்டி காவல் நிலைய கான்ஸ்டபிள் செல்வம் 'வீடியோ' வெளியிட்டார். அதில், '2009 - 2012 வரை, சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில், சுந்தரேசன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.
இவரிடம் நான் ஓட்டு நராக பணிபுரிந்துள்ளேன். சுந்தரேசன் நேர்மையானவர். எந்த விஷயத்திலும் உண்மையாக இருப்பார்' என்று பாராட்டி பேசியிருந்தார். இதையடுத்து செல்வம், ஆயுதப்படைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

