பெண் வி.ஏ.ஓ., இறப்பில் சந்தேகம் விஷம் கொடுத்து கொன்றதாக காதலன் புகார்
பெண் வி.ஏ.ஓ., இறப்பில் சந்தேகம் விஷம் கொடுத்து கொன்றதாக காதலன் புகார்
ADDED : ஜன 02, 2026 01:54 AM

திருவள்ளூர்: பொன்னேரி அருகே, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் வி.ஏ.ஓ., நேற்று உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்த நிலையில், விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக காதலன் புகார் அளித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் அருணா, 27. இவர், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வந்தார்.
சம்மதிக்கவில்லை
இவர், பொன்னேரி பாக்கம் கிராம வி.ஏ.ஓ., சிவபாரதி, 30, என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அருணாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை என, கூறப்படுகிறது.
கடந்த 29ம் தேதி அருணா வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்ததாக கூறி, அவரது பெற்றோர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு நேற்று காலை அருணா உயிரிழந்தார். திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அருணாவிற்கு அவரது குடும்பத்தினர் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டதாக, அவரது காதலனும், பாக்கம் கிராம வி.ஏ.ஓ.,வுமான சிவபாரதி, திருப்பாலைவனம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த 2023ல் நானும், அருணாவும் ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தோம். அன்று முதல் நண்பர்களாக பழகி வந்தோம். நட்பு காதலாக மாறியது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம்.
நான், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன். அருணா, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். எங்கள் வீட்டில் திருமணத்திற்கு சம்மதித்தனர்.
அருணா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து, அவரது குடும்பத்தினர், அருணாவை துன்புறுத்தி வந்தனர். அவரது, 'வாட்ஸாப், இன்ஸ்டாகிராம்' ஆகிய வலைதளங்களை கண்காணித்தனர்.
அருணாவின் சகோதரர்கள், என்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நினைத்தேன். 'சிறிது காலம் பொறுமையாக இருங்கள்' என, அருணா தடுத்து விட்டார்.
விசாரணை
இந்நிலையில், 29ம் தேதி அருணா என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
மறுநாள், அவரது தந்தையின் மொபைல்போனில் என்னை தொடர்பு கொண்ட அருணா, 'குடும்பத்தினர் என்னை பலமாக தாக்கி விட்டனர். பூச்சி மருந்தை வாயில் ஊற்றி குடிக்க வைத்தனர். நான் இப்போது ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கிறேன்' என்றார்.
சிகிச்சையில் இருந்த அருணா நேற்று இறந்து விட்டார். அருணாவை அவரது குடும்பத்தினர் விஷம் கொடுத்து கொலை செய்து உள்ளனர். அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

