தமிழக அரசின் ஆர்.டி.ஐ., தளம் முடக்கம்: திட்டமிட்டு நிறுத்தியதாக சந்தேகம்
தமிழக அரசின் ஆர்.டி.ஐ., தளம் முடக்கம்: திட்டமிட்டு நிறுத்தியதாக சந்தேகம்
ADDED : டிச 08, 2025 02:46 AM

கோவை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான தமிழக அரசின் இணையதளம் முடங்கியுள்ளது. புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாததால், திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஆன்லைன் வாயிலாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சேவை பெறும் வசதியை, தமிழக அரசு 2020ல் துவக்கியது. https://rtionline.tn.gov.in/ என்ற இணைய பக்கத்தில் பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இந்த தளம், தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை வழியாக நிர்வகிக்கப்படுகிறது. அனைத்துத் துறைகளுக்கும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது என்றாலும், பெரும்பாலான துறைகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முடியவில்லை சமீபத்தில், டி.என்.பி.எஸ்.சி.,யும் ஆன்லைன் வாயிலாக, மனு மற்றும் மேல்முறையீடுகளை ஏற்பதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், சில வாரங்களாக எந்தவொரு துறைக்கும், https://rtionline.tn.gov.in/ என்ற தளம் வாயிலாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியவில்லை.
இதுதொடர்பாக, பொதுமக்கள் கூறியதாவது:
மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை கோரும், அந்த இணையதள பக்கத்தில், ஓ.டி.பி., வாயிலாக உள்நுழையலாம். தற்போது, ஓ.டி.பி., பதிவு செய்தாலும், அதே பக்கத்தில் நிலை கொள்கிறது. புதிய கோரிக்கை எதையும் விண்ணப்பிப்பதற்கான பக்கம் திறப்பதே இல்லை. குரோம் உட்பட அனைத்து பிரவுசர்களிலும் இதே நிலை தான். அதே சமயம் விண்ணப்பம் மீதான நிலையை அறிவதற்கான பக்கம் திறக்கிறது.
திட்டமிட்டு முடக்கம் புதிய விண்ணப்பங்களை யாரும் சமர்ப்பிக்கக் கூடாது என திட்டமிட்டே, அரசு தரப்பில் இப்பக்கத்தை முடக்கியிருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தகவல் அறியும் உரிமை என்பது, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ உரிமை. இதைப் பயன்படுத்துவதை பரவலாக்க அரசு முன்வர வேண்டும்.
மக்களுக்கான தகவல் அவ்வளவு எளிதில் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, ஆன்லைன் வாயிலாக தகவல் பெறும் உரிமை சட்ட அணுகலை, அரசுத்துறை முடக்கி வைத்துள்ளதாகவே தோன்றுகிறது. இதுதொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவுக்கு விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உடனடியாக, ஆன்லைன் தளத்தை சரி செய்து, அனைத்து துறைகளுக்கும் விண்ணப்பிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

