ஓட்டு வங்கிக்காக ஊடுருவலை அனுமதித்தவர்; மம்தா மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு
ஓட்டு வங்கிக்காக ஊடுருவலை அனுமதித்தவர்; மம்தா மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு
ADDED : ஜன 06, 2025 07:43 AM

கோல்கட்டா : 'வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு தங்க இடமளித்து தன் ஓட்டு வங்கியாக மாற்றியவர் மம்தா' என, மேற்கு வங்க பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் கிழக்கு பகுதிகள் நம் அண்டை நாடான வங்கதேசத்துடன் எல்லையை பகிர்கிறது. இந்த எல்லைப் பகுதி பி.எஸ்.எப்., எனப்படும், எல்லைப் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் உள்ளது.
இந்நிலையில், 'பி.எஸ்.எப்., படையினர் எல்லையில் வங்கதேசத்தினரை ஊடுருவ அனுமதிக்கின்றனர். மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மத்திய அரசு வகுத்துள்ள திட்டத்தின் ஒரு பகுதி இது' என, பகீர் குற்றச்சாட்டை முதல்வர் மம்தா முன் வைத்தார். இதை பி.எஸ்.எப்., திட்டவட்டமாக மறுத்தது.
இதைத் தொடர்ந்து மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., பிரமுகருமான சுவேந்து அதிகாரி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் நடக்கும் ஊடுருவலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையை குற்றஞ்சாட்டுவது, மத்திய ஆயுத போலீஸ் படையின் 75,000 வீரர்களையும், மேற்கு வங்கத்தில் பணியில் உள்ள 33,000 பி.எஸ்.எப்., வீரர்களையும் அவமதிக்கும் செயல்.
அரசியலில் பாதுகாப்புப் படையினரை இழுத்து அவமானப்படுத்துவது, உங்கள் தோல்வியை மறைக்க செய்யப்படும் தரக்குறைவான அரசியல். நாட்டின் 15,000 கி.மீ.,க்கு மேல் உள்ள எல்லைகளை, கடுமையான வானிலைக்கு இடையிலும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்கின்றனர்.
மாநிலத்திற்குள் ஊடுருவியவர்களுக்கு கிராமங்களில் குடியேற அனுமதி அளித்தது ஏன்? ஊடுருவலை தடுக்க மாநில அரசு தன் பங்கிற்கு என்ன செய்துள்ளது?
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களை ஓட்டு வங்கியாக மாற்றும் வேலையில் ஈடுபட்டீர்கள். மத்திய அரசையும், பாதுகாப்பு படையினரையும் குற்றஞ்சாட்டுவதற்கு முன், ஓட்டு வங்கி பேராசைக்காக நீங்கள் மேற்கு வங்கத்தின் மக்களையும், கலை மற்றும் கலாசாரத்தையும் தியாகம் செய்துவிடாதீர்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.