எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை நிறுத்திவைப்பு
எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை நிறுத்திவைப்பு
ADDED : மார் 15, 2024 09:24 PM
சென்னை:சமூக வலைதளங்களில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்ததாக பதிவான வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாத சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, 2018-ல் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகரும், பா.ஜ., பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது மிதார் மொய்தீன் என்பவர், போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், பிப்.,19ல் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
அப்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறை தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அப்போது, இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நீதிபதி, மனு தொடர்பாக காவல் துறை பதிலளிக்கும்படி கூறி, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

