கால் கிரவுண்ட் ரூ.10 லட்சத்துக்கு சதுப்பு நிலம் சட்டவிரோத விற்பனை; சென்னையில் அரசு துறைகள் அலட்சியம்
கால் கிரவுண்ட் ரூ.10 லட்சத்துக்கு சதுப்பு நிலம் சட்டவிரோத விற்பனை; சென்னையில் அரசு துறைகள் அலட்சியம்
UPDATED : அக் 28, 2025 07:06 AM
ADDED : அக் 28, 2025 07:05 AM

சென்னை: சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுப்பு நிலம், கால் கிரவுண்ட் 10 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. அங்கு, காசிருந்தால் போதும்; ஆவணங்கள் எதுவும் வேண்டாம் என்று அறிவிக்காத குறையாக, ரியல் எஸ்டேட் வர்த்தகம் அமோகமாக நடந்து வருகிறது.
பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தை ஒட்டி, கல்லுக்குட்டை நீர்நிலை பகுதி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்நிலை, 350 ஏக்கருக்கும் அதிகமான பரப்புடையது. இதன் பக்கத்தில், அன்னை சந்தியா நகர் உட்பட ஏராளமான நகர்கள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் பெருங்குடி ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர், கல்லுக்குட்டை நீர்நிலையில் சேர்கிறது. இதிலிருந்து வடியும் நீர், சதுப்பு நிலத்தை அடையும் வகையில் உள்ளது.
நிலத்தடி நீராதாரமாக விளங்கும் இந்த கல்லுக்குட்டை பகுதி, சதுப்பு நிலத்தில் கட்டடக் கழிவுகள் கொட்டி, சில மாதங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது, 2 ஏக்கர் பரப்பில் காலி மனையாக மாற்றி, விற்கப்பட்டு வருகிறது. கால் கிரவுண்ட் நிலம், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்லுக்குட்டை பகுதியில் ஏற்கனவே 13,000 வீடுகள் உள்ளன. இப்பகுதியினர், மாநகராட்சிக்கு குடிநீர், கழிவுநீர், வீட்டு வரி என எதுவும் செலுத்துவதில்லை. ஆனாலும், அப்பகுதிக்கு சாலை அமைத்து, குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியினர் தங்கள் இருப்பிடத்தை விரிவாக்கம் செய்வதற்காக, கல்லுக்குட்டையை ஒட்டிள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து வருவதாகவும், அதை தடுக்க வேண்டிய வனத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, கல்லுக்குட்டை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது: கல்லுக்குட்டை நீர்நிலை பகுதியில், அன்னை சந்தியா நகர் உள்ளது. இங்குள்ள 7 வது தெரு முதல் 10வது தெரு வரையிலான தெருக்கள் முடியும் இடத்தில், சதுப்பு நிலத்தில் 2 ஏக்கர் பரப்பில் கட்டட கழிவுகள் கொட்டி, சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
மண் கொட்டி சமன் செய்யப்பட்ட நிலத்தில் கால் கிரவுண்ட் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எந்த வகையான ஆவணங்களும் வேண்டாம் என தெரிவிக்கின்றனர். இடம் வாங்கி வீடு கட்டிவிட்டால், வரும் காலத்தில் கேட்பாரற்ற நிலம் என குறிப்பிடப்பட்டு, பட்டாவும் வழங்கப்பட்டுவிடும் எனக்கூறியே, நிலத்தை விற்கின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், ஆக்கிரமிப்பாளர்கள் தகராறு செய்கின்றனர்.சதுப்பு நிலத்தை காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலில், அரசு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், சதுப்புநிலம் மேலும் சுருங்கி வருகிறது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில், வரும் காலங்களில் அங்கு வீடுகள் அதிகரித்து, மோசமான பின்விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும். எனவே, வனம், வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒன்றிணைந்து, சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பெருங்குடி மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில்,''கல்லுக்குட்டை சதுப்பு நில ஆக்கிரமிப்பு குறித்து, மண்டல குழு கூட்டத்திலும் பேசியுள்ளோம். அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இது குறித்து, மாநகராட்சி உதவி பொறியாளர்கள் கூறியதாவது: கல்லுக்குட்டை பகுதியை ஒட்டிய சதுப்பு நிலத்தை சில ஆக்கிரமிக்க முயன்றனர். இதை தடுக்கும் வகையில், கல்லுக்குட்டை பகுதிக்கு வாகனங்கள் செல்லாதிருக்க, பாதை குறுக்கில் பள்ளம் வெட்டப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், வசிக்கும் இடத்தை இடிப்பதாக கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அப்பணி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 
இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து, வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு துறையும் தலையிட்டு, சம்பந்தப்பட்ட இடத்தை அளந்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு நடக்காமல் இருக்க, அன்னை சந்தியா நகர் முதல் தெரு முதல் முதல் 6 வது தெருவரையும், திருவள்ளுவர் நகர் தெருக்களின் முடிவிலும் தடுப்பு சுவர் கட்டப்பட்டு உள்ளது. அதேபோல், 7வது தெரு முதல் 10வது தெருக்கள் வரையும் தடுப்பு சுவர் கட்டினால், ஆக்கிரமிப்புகளை தடுக்க இயலும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

