'சி.எம்., அரைஸ்' திட்டத்தை செயல்படுத்த நிதியில்லை: விண்ணப்பங்களை நிராகரிக்கிறது 'தாட்கோ'
'சி.எம்., அரைஸ்' திட்டத்தை செயல்படுத்த நிதியில்லை: விண்ணப்பங்களை நிராகரிக்கிறது 'தாட்கோ'
ADDED : நவ 24, 2025 12:25 AM
சென்னை: 'சி.எம்., அரைஸ் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வழங்க மானியம் இல்லை' எனக்கூறி, விண்ணப்பங்களை தாட்கோ அதிகாரிகள் நிராகரிப்பது, எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான 'தாட்கோ' சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், புதிதாக தொழில் துவங்க மற்றும் தொழிலை விரிவுபடுத்த, 'சி.எம்., அரைஸ்' என்ற முதல்வரின் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ், அழகு நிலையம், கால்நடை பண்ணை அமைப்பது உட்பட 15 பிரிவுகளில், அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை, பொதுத்துறை வங்கிகளில் கடன் தரப்படுகிறது. இதில், அதிகபட்சமாக 3.5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 4,687 பேருக்கு, 89 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடன் பெறுவோரின் விண்ணப்பங்களை, மானியம் இல்லை எனக்கூறி, அதிகாரிகள் கடந்த ஆறு மாதங்களாக நிராகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, விண்ணப்பித்த சிலர் கூறியதாவது:
முதல்வரின் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் பெற, கடந்த நான்கு மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தோம். ஆனால், விண்ணப்பத்தை அதிகாரிகள் இரண்டு மாதங்களில் நிராகரித்து விட்டனர். இதுகுறித்து தாட்கோவில் கேட்ட போது, 'திட்டத்தை செயல்படுத்த அரசு வழங்கிய நிதி முடிவடைந்து விட்டது' என்றனர்.
பொதுவாக, எஸ்.சி., - எஸ்.டி., மக்கள் கடன் பெற விண்ணப்பித்தால், தாட்கோ அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி, விண்ணப்பங்களை நிராகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதைமீறி அதிகாரிகள் ஏற்றுக் கொண்டாலும், வங்கி நிர்வாகம் ஏற்பதில்லை.
மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பித்த 100க்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்களை, மானியம் இல்லை எனக்கூறி தாட்கோ அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
ஆனால், தாட்கோ நிதியில் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு மட்டும் நிதி இருக்கிறது. அதேபோல், நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்திலும் மானியம் இல்லை எனக்கூறி, பலரது விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி தாட்கோ அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொழில்முனைவோர் திட்டத்திற்கு அரசு வழங்கிய 75 கோடி ரூபாய் நிதியை, முழுமையாக பயன்படுத்தி உள்ளோம். எனவே, தற்போது விண்ணப்பிக்கும் நபர்களுக்கான மானிய தொகையை விடுவிக்க முடியவில்லை. அரசு தான் இப்பிரச்னையில் தீர்வு காண வேண்டும்' என்றார்.

